ஒரு நாள் (22-02-1961) அப்பு ஆசை ஐயாவுடைய மாட்டுக் கொட்டிலில் நின்ற பொழுது அவருடைய செல்லமான கன்று அவரை நட்பாக அவர் தோளில் தட்டியது. அப்பு நிலத்தில் விழுந்து விட்டார். அவருடைய இடது இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது. அப்புவிற்கு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் இராசநாயகம் என்பவரால் யாழ்ப்பாண மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது. இந்தநாள் முதல் அப்புவிற்கு சக்கர நாற்காலியும் மற்றும் அர்ப்பணிப்பான கவனிப்பும் தேவைப்பட்டன. இதற்காக வைத்தியர் கனகரெட்னம் என்பவரால் பல்வேறு வைத்திய நிபுணர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
அப்பு வைத்தியர் கனகரெட்னத்தை எனக்கு அவருடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முழுமையான பயிற்சி அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். பாடசாலை நாட்களைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் 24/7 அப்புவிற்கு தொண்டு செய்வதே எனது கடமையாக இருந்தது. நான் அப்பொழுது யாழ்ப்பாணத்தில் உள்ள St.Johns கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன்.
அப்பு வைத்தியர் கனகரெட்னத்தைத் தனக்கு வைத்தியம் பார்க்கும் பணியிலிருந்து விடுவித்து அவருடைய சமூகப் பொறுப்புகளில் கவனம் செலுத்தும்படி கூறினார்.அப்புவினுடைய குரு செல்லப்பாசுவாமிகளுடைய மூன்று அடியார்கள் கொழும்புத்துறையில் அப்புவின் ஆசிரமத்தில் இருந்து சில நூறு அடி தூரத்தில் வசித்தார்கள்.
- திரு.துரையப்பா அப்பா
- திரு.திருஞானசம்பந்தன் (விதானையார்)
- திரு.பொன்னையா
இந்த மூன்று அடியார்களும் தினமும் நல்லூரில் உள்ள செல்லப்பாசுவாமிகளையும் அப்புவையும் வந்து பார்ப்பார்கள். அவர்களில் துரையப்பா அப்பா அவருடைய இறுதி நாட்களிலும் கூட மாலை நேரங்களில் அப்புவைச் சந்திக்க வருவார். அவர் வரும்பொழுதெல்லாம் அப்புவிற்கும் அவருக்கும் இடையில் இருந்த சிறந்த தோழமையை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில நேரங்களில் அவர்கள் இருவருக்குமான
உரையாடல் பல மணிநேரங்களாக நடக்கும். அவர்களுடைய உரையாடல் நேரடியாகவும் நெருங்கிய நட்பாகவும் ஒரு குருவுக்கும் சீடனுக்குமான உறவு மாதிரியில்லாமல் இருக்கும்.
ஒரு நாள் துரையப்பா அப்பா ஒரு மாலை நேரத்தில் அப்புவைப் பார்க்க வந்தபொழுது அப்பு அவரிடம் “துரையப்பா நீ சாகப் போகிறாய். உனது பாடல்களை இவனுக்குப் படிப்பி” என்று கூறினார். இது நடந்தது அப்பு Lord Soulbury ஐ சந்தசுவாமிகள் என்று பெயர் சூட்டி தீட்சையளிப்பதற்கு முன்பு (30-12-1963 க்கு முன்) சரியான திகதி எனக்கு நினைவில் இல்லை.
துரையப்பா அப்பா வழமையாக படிக்கும் பாடல்களை எனக்குக் கற்பித்தார். அதனுள் “பெருச்சாளி வாகனத்தில்” (இந்த பாடல் நற்சிந்தனை புத்தகத்தில் இல்லை) மற்றும் “வீரமாமயில் ஏறும் வேலவ” ஆகிய பாடல்களும் அடங்கும்.
பெருச்சளி வாகனத்தில்
பெருச்சாளி வாகனத்தில் பவனி எழுந்து வாற பெருமையைப் பாரும் பாரும்
ஒருச்சாண் நெடுங்குளத்தில் ஓங்காரமான தேவர் உமையோர் பதம் பரவ
எமையோர் தம்மை இரட்சிக்க (பெருச்சாளி)
ஒருமருப்பும் இருபதமும் ஒருமூன்று நேத்திரமும்,
புனைக்கரவம் திருப்பொலிவும் நல்ல கெம்புரவும் சம்புரமும்,
திருவளர் கிண்கிணி மணிகள் பண்டிகை சித்தர்கள் கொண்டாட,
நல்ல வேதம் பாட மட மின்னர்கள் ஆட
கிள கிருத தகுதிகு கயவென அசுரர்கள் நெறுவிய களமிசை தகுதிகு தா
தையத் தா தளங்குதா தளங்கு தோமென (பெருச்சாளி)
வீரமாமயில் ஏறும் வேலவ
வீரமாமயில் ஏறும் வேலவ விளங்கு
கெளரி பாலகாவா
கானக்குறத்தி மகிழும் பாதா – காக்கும்
கடவுள் துதிக்கும் நாதா (வீரமாமயில்)
எனக்கும் உனக்கும் பேதமேனோ
எடுத்துச்சொன்னால் போதம் போமோ
மணக்குஞ் சோலை நல்லூர் வாசா
வணங்கும் யோகசுவாமி நேசா (வீரமாமயில்)
இது நடந்த அதே நாள் இரவு துரையப்பா அப்பா அவருடைய கொழும்புத்துறையிலுள்ள மகளின் வீட்டில் காலமானார். அடுத்த நாள் காலையில் நான் அப்புவிடம் துரையப்பா அப்பா காலமாகிவிட்டார் என்று கூறியதும் அப்பு என்னை துரையப்பா அப்பா எனக்கு கற்பித்த பாடல்களை அவருடைய வீட்டிற்குச் செ ன்று பாடும்படி கட்டளையிட்டார். அதன்படி நானும் அவருடைய வீட்டிற்குச் சென்று எனக்கு அவர் கற்பித்த பாடல்களைப் பாடினேன். துரையப்பா அப்பாவின் மறைவிற்குப் பின்னர் நான் அந்தப் பாடல்களை அப்புவுடைய ஆச்சிர மத்தில் பாடி வந்தேன். நான் “வீரமாமயில் ஏறும் வேலவ” என்ற பாடலைப் பாடும் பொழுது அப்பு என்னை சில மாற்றங்களுடன் பாடும்படி கூறி இதை குறிப்பிட்டார்: “அவன் கந்தசுவாமி என்னுடைய கூட்டாளி”. அப்புவினால் கூறப்பட்ட மாற்றங்களைக் கொண்ட “வீரமாமயில் ஏறும் வேலவ” என்ற பாடல் கீழ்வருமாறு:
வீரமாமயில் ஏறும் வேலவ
வீரமாமயில் ஏறும் வேலவ – விளங்கு
கெளரி பாலகாவா
கானக்குறத்தி மகிழும் பாதா – காக்கும்
கடவுள் துதிக்கும் நாதா (வீரமாமயில்)
எனக்கும் உனக்கும் பேதமுண்டோ
எடுத்துச்சொன்னால் போதம் போமோ
மணக்குஞ் சோலை நல்லூர் வாசா
வணங்கும் யோகசுவாமி நேசா (வீரமாமயில்)
நான் தொடர்ந்து எல்லாப் பாடல்களையும் அப்புவுடைய மாற்றங்கள் அடங்கிய பாடலையும் தினமும் பாடி வந்தேன். கட்டுரையில் குறிப்பிடப்பட்ட “அந்தக் குடிசை ஒரு உயிருடன் உள்ள கடவுளின் கோவில்” என்பதையும் அப்பு எப்படி இந்த உண்மையை “தான் ஒரு கடவுளின் மறுபிறவி” என்பதை எங்களுக்கு தெரியவிடாமல் காப்பாற்றினார் என்பதையும் உணர்கின்றேன். நாங்கள் அவரை அப்பு என்று அழைத்து அவரின் பணிவிடைகளை அவர் திருப்தியடையும் வண்ணம் செய்து வந்தோம்.
இந்த காலகட்டத்தில் அப்பு எனக்கு வேறு கடமைகளையும் கற்பித்து அவற்றை தேவையான நேரத்தில் தனக்கு செய்யவும் வைத்தார். ஒரு முறை நான் இரவில் எழும்பாததற்காக அப்பு எனக்கு மேல் சிறுநீர் போத்தலை எறிந்தார். என்னை தீவான்/உமல் மாறிகள் என்று ஏளனமும் செய்தார். நான் அவருடைய இந்த தண்டனைகள் காரணமாக கோபமடைந்த பொழுது என்னை அன்பாக “ஈஸ்வரா” என்று கூப்பிட்டு அரவணைத்தார். இந்த அன்பு அரவணைப்பின் பின் நான் தொடர்ந்து அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தேன்.
ஒரு முறை இரவு அதிகாலையில் அப்பு என்னை எழுப்பி காலைக்கடன்களை செய்வதற்கு நேரம் கடந்து விட்டது என்று கூறினார். காலைக்கடன்களில் முகம் அலம்பிய பின்னர் சுடச்சுட ஹோர்லிக்ஸை அவரும் நானும் குடித்தலும் அடங்கும். அதன் பின்னர் நாங்கள் திருவாசகமும் நற்சிந்தனைப் பாடல்களும் படித்தோம். இந்த பிரார்த்தனையின் பின் அவர் என்னிடம் “என்ன நேரம்?” என்று கேட்டார். நான் அதற்கு கடிகாரத்தைப் பார்த்து விட்டு காலை 2.00 மணி என்று கூறியதற்கு அவர் “ஓ..இன்னமும் காலை நேரம் வரவில்லை. படுக்கப் போவோம்” என்றார். இப்படியான நிகழ்ச்சிகள் பல தடவைகள் இரவு நேரங்களில் நடந்துள்ளன. இது எனக்குச் சர்வசாதாரணமாகி விட்டது. நான் கல்லூரிப் பயணங்களுக்குச் செல்லும் பொழுது எனது மைத்துனர் திரு. T.வரதராஜா (எனது மூத்த அக்காவுடைய கணவர்) இந்தக் கடமைகளைச் செய்த போதும் இச் சம்பவம் நடைபெற்றிருந்தது.
நானும் சின்னண்ணையும் (திருஞானசம்பந்தன்) இரவு நேரங்களில் அப்புவுக்கு தேவையான கடமைகளை செய்து வந்தோம். சில சமயத்தில் சின்னண்ணைக்குரிய வேலைகளை நான் செய்துள்ளேன். நாம் இருவரும் அப்புவுக்கு மாலை உணவு கொடுப்போம். அப்புவுடைய மாலை நேர உணவு மிகவும் மென்மையானதாக இருக்கும். ஆசைமம்மி பாணை பட்டர், தேனுடன் தடவி நன்றாகத் துண்டுகளாக வெட்டி தயாரித்து கொடுப்பார். நாங்கள் இருவரும் அப்புவிடம் அதை எடுத்துக் கொண்டு சென்று அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் விடும் மிகுதியை உண்பதற்காக காத்திருப்போம். சில நேரங்களில் அப்பு சில பாண் துண்டுகளை எங்களிடம் கொடுப்பார். நாங்கள் இருவரும் அதைப் பகிர்ந்து உட்கொள்வோம். சில நேரங்களில் அப்பு வெறுமையான தட்டை எங்களிடம் கொடுத்து எங்களது ஏமாற்றமடைந்த முகங்களைப் பார்த்துச் சிரிப்பார். சின்னண்ணை நான் அவருக்காக செய்த வேலைகளுக்கு கைமாறாக என்னை திரையரங்குகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் கூட்டிச் செல்வார்.
அந்தக் காலகட்டத்தில் Dr.வெற்றிவேல் தினமும் அப்புவைக் காலையில் வந்து அவருக்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்த பின் அப்பு காலை உணவு அருந்துவார். அதன் பின் அப்புவின் விருப்பத்திற்கு இணங்க அவரை அவருடைய சக்கரநாற்காலியில் வைத்து நானும் அவரும் கொழும்புத்துறை வீதியினுடடாக ஒரு சிறிய உலா மேற்கொள்ளுவோம். ஆசிரமத்தின் படலையை விட்டு வெளிக்கிடும்பொழுது அப்பு எனக்குத் தனது கையைக் காட்டி நான் இடது பக்கமாகவா அல்லது வலது பக்கமாகவா போகவேண்டும் என்பதைத் தெரிவிப்பார். நாங்கள் இடது பக்கமாகப் போகும் பொதெல்லாம் Dr.நடராஜாவினுடைய வீடுவரை சென்று அங்கு தேநீர் அருந்திவிட்டு வருவோம். வலது பக்கமாகப் போகும் பொதெல்லாம் துண்டி வீதி சந்தி வரை போய் திரும்பி வருவோம்.
சில சந்தர்ப்பங்களில் அப்பு என்னிடம் சக்கரநாற்காலியை நிறுத்தச் சொல்லாமல் என்னை கொழும்புத்துறை வீதி முழுவதும் போகவிட்டுப் பின் பிரதான வீதியினூடாக சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, St.John’s கல்லூரி, Dr.சோமசுந்தரம் வைத்திய நிலையம் (சில நேரங்களில் Dr.சோமசுந்தரம் அப்புவை காணும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அவர் அப்புவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்) ஆகியவற்றைக் கடந்து மணிக்கூட்டுக்கோபுரம் வீதியிலுள்ள Sir.துரைசாமியினுடைய வீட்டிற்குச் சென்று தேநீர் அருந்துவதோடு அந்தப் பயணம் முடிவடையும்.
Sir.துரைசாமியினுடைய வீட்டில் நிற்கும் பொழுது நான் அப்புவுடைய சக்கரநாற்காலியை Sir.துரை சாமியினுடைய மகன் தெய்வத்தினுடைய வண்டிக்குப் பாவிக்கும் உபகரணங்களைக் கொண்டு அவ்வப்பொழுது சிறிதான பராமரிப்புத் தேவைகளுக்காகப் பாவிப்பேன். பின் கொழும்புத்துறை ஆசிரமத்திற்குத் திரும்புவோம். இப்படியான பயணங்களில் மக்கள் எப்பொழுதும் எங்களுக்குப் பின்பக்கமாக கூட்டம் கூடுவார்கள். அப்பு திரும்பி, பின்பக்கமாக அவர்களைப் பார்த்து சில வார்த்தைகளைக் கூறி ஆசீர்வதித்து அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவார்.
14-01-1964 தைப்பொங்கல் அன்று காலை அப்பு என்னிடம் “வாடா இண்டைக்கு ஒரு தங்கப்பவுண் எடுக்கவேணும்” என்று கூறினார். பின்பு நாங்கள் எங்கள் பயணத்தைக் கொழும்புத்துறை வீதியினூடாக பிரதான வீதிக்குச் சென்று பின்பு மணிக்கூட்டுகோபுரம் வீதியிலுள்ள Sir. துரைசாமியினுடைய வீட்டிற்குச் சென்றோம். அப்பு அவரிடம் “எனக்கு ஒரு தங்கப்பவுண் வேண்டும்” என்று கேட்டார். Sir.துரைசாமி தன்னிடம் தற்பொழுது தங்கப்பவுண் இல்லை என்பதை அவருடைய வழமையான சிரிப்புடன் பதிலளித்தார். அப்பு அதற்கு நாங்கள் இங்கு தேநீர் அருந்தமாட்டோம் என்று கூறிவிட்டு என்னைக் கொட்டடியிலுள்ள Dr.குருசுவாமி வீட்டிற்கு செல்லுமாறு சொன்னார். நான் அப்புவை அழைத்துக் கொண்டு மணிக்கூட்டுகோபுரம் வீதியினூடாக மருத்துவமனை வீதியிலுள்ள யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கக்கடையைக் கடந்து Dr.குரு சுவாமி வீட்டை அடைந்தோம். அந்த நேரத்தில் அப்பு மிகவும் சோர்வு அடைந்து சக்கரநாற்காலியின் ஒரு பக்கத்தில் சாய்ந்து கொண்டார். நான் எனது ஒரு கரத்தால் அவரை உறுதியாகப் பிடித்துக் கொண்டு எனது மற்றக் கரத்தால் சக்கரநாற்காலியை தள்ளிக் கொண்டு சென்றேன். திருமதி குருசுவாமி எங்களுக்குத் தேநீர் கொடுத்தார். அப்பு அவர்களிடம் ஒன்றும் கேட்கவில்லை. அப்பு என்னிடம் தன்னைக் கஸ்தூரியார் வீதியிலுள்ள Dr. பசுபதியினுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி சென்னார். நான் அப்புவை கொட்டடியிலிருந்து மருத்துவமனை வீதி, KKS வீதி ஆகியவற்றினூடாகச் சென்று பின்பு கஸ்தூரியார் வீதியிலுள்ள Dr.பசுபதியினுடைய வீட்டிற்குச் சென்றோம். நாங்கள் அவருடைய வீட்டில் திரு.சிறீகாந்தா வினுடைய இரு மகன்மார்களைச் (ஜனகன் மற்றும் அவருடைய மூத்த சகோதரன்) சந்தித்தோம். அப்பு அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு திரும்பி KKS வீதியினூடாக சிறிலங்கா புத்தகசாலையைக் கடந்து செல்லும் பொழுது திரு.தெய்வேந்திரம் (புத்தகக் கடை உரிமையாளர்)அவர்கள் எங்களைத் தனது மோட்டார் வண்டியில் கொழும்புத்துறைக்குக் கூட்டிச் செல்வதற்குக் கேட்ட பொழுது அப்பு அதை மறுத்துவிட்டார். நாங்கள் தேவாலயம் வீதியினுடடாகக் கொழும்புத்துறைக்குப் போவதற்கு எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். அப்பு என்னிடம் தேவாலயம் வீதியிலுள்ள திரு.திருமதி.முத்துகுமாரினது வீட்டிற்குச் செல்லும்படி சொன்னார். நாங்கள் அவருடைய வீட்டிற்கு எந்தவித முன் அறிவித்தலும் இல்லாமல் சென்றோம். திருமதி முத்துகுமார் அவர்கள் ஒரு தட்டில் பழங்களும் பணக்கட்டுக்களுடன் தங்கப்பணும் வைத்து அப்புவிடம் கொடுத்தார். அப்பு உடனே “வந்த காரியம் முடிச்சாச்சு” என்று கூறினார். எனக்கு அப்பு தனக்கு தங்கப்பவுண் கிடைத்ததைத் தான் இப்படி குறிப்பிடுகிறார் என்று நன்கு புரிந்தது. நாங்கள் அப்புவினது ஆசிரமத்தை மதிய நேரத்தில் வந்தடைந்தோம். அப்பொழுது திரு.கார்த்திகேசன் என்பவர் என்னிடம் தாங்கள் எல்லோரும் ஈஸ்வரனையும் சுவாமிகளையும் யாழ்ப்பாணம் முழுவதும் தேடியதாகக் கூறினார். இறுதியாகச் சக்கரநாற்காலியைக் கொண்டு அப்பு செய்த நீண்ட பயணம் 13-02-1964 அன்று Sir வைத்தியலிங்கம் துரைசாமியுடைய வீட்டிற்கு தான். நான் இந்த திகதியை எப்படி எனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த நாட்குறிப்பு எனக்கு ஆசை ஐயாவினால் வழங்கப்பட்டது. சக்கரநாற்காலியைக் கொண்டு செல்லும் சிறிய பயணங்கள் தினமும் காலையிலும் மாலையிலும் நடைபெறும். சக்கரநாற்காலியைக் கொண்டு செல்லும் நீண்ட பயணங்கள் கைவிட்டு எண்ணக்கூடிய தடவைகள் தான் நடைபெற்றுள்ளன.
அப்புவினது விருப்பத்தின்படி மோட்டார் வண்டிகளிலும் நீண்ட பயணங்கள் நடைபெறும். பல தடவைகள் மாவிட்டபுரத்திற்குச் சென்றுள்ளோம். ஒரு முறை அப்பு மாவிட்டபுரத்தில் வண்டியை நிறுத்தி ஒரு வயதான மனிதரிடம் அவர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாடகத்தில் நடித்த நபரைப்பற்றி விசாரித்தார். அந்த வயதான மனிதருக்கு இந்த விபரங்கள் அவருடைய நினைவில் இருக்கவில்லை. நாங்கள் அனேகமாக KKS வீதியினூடாகத் தையல் நாயகிக் கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், சிவதொண்டன் நிலையம் ஆகியவற்றைக் கடந்து செல்லுவோம். நாங்கள் சிவதொண்டன் நிலையத்திற்கு முன்பு நின்று அவ்வப் பொழுது சிவதொண்டன் நிலையத்தில் இருப்பவர்களுடன் கதைத்துவிட்டு செல்லுவோம். ஆனால் அப்பு அந்நேரங்களில் சிவதொண்டன் நிலையத்திற்குள் சென்றதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் அப்பு என்னிடம் நாங்கள் சிவதொண்டன் நிலையத்திற்கு சென்று சில நாட்கள் தங்குவோம் என்று கூறினார். அப்பு ஆனி/ஆடி 1963 இல் சிவதொண்டன் நிலையத்திற்குள் சென்றது இதுவே முதல் தடவையாகும். நானும் அவருடன் தங்கி எனது வழமையான கடமைகளை அப்புவிற்குக் கொழும்புத்துறையில் செய்வது போல் இங்கும் செய்து வந்தேன். சிவதொண்டன் நிலையத்திற்குள் அமர்ந்து சக்கரநாற்காலியை ஓட்டுவது எனக்கு மகிழ்ச்சியான தருணம். நாங்கள் அங்கு தங்கியிருந்த நேரத்தில் எனது அம்மம்மா சடுதியாக சுகவீனம் அடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு காலமானார். ஆசை ஐயா, ஆசைமம்மி, பாட்டா (திரு.பொன்னம்பலம் – அவர் அப்புவை பகல் நேரங்களில் நான் எனது இரவு கடமைகளை முடித்த பின்னர் பார்த்துக்கொள்பவர்) ஆகியோரை எனது அம்மம்மாவினது இறுதிப் பயணத்தை நன்கு செய்து முடிப்பதற்காகத் தான் அப்பு சிவதொண்டன் நிலையத்திற்கு சென்று தங்கியுள்ளார் என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன்.
ஒரு முறை அப்பு என்னிடம் “திரு.திருமதி நவரெட்னம் வீட்டிற்கு (அவர்கள் அந்த காணியை கொழும்புத்துறையில் அப்புவிற்கு அருகாமையில் இருப்பதற்காக வாங்கினார்கள்) சென்று தங்குவோம்” என்று கூறினார். நான் அப்புவை அவர்களுடைய வீட்டிற்கு சக்கரநாற்காலியில் அழைத்துச் சென்றேன். சக்கர நாற்காலியுடன் அப்பு பயணம் செய்யும் பொழுதெல்லாம் இவர்களுடைய வீட்டையும் கடந்து செல்லுவோம். ஒரு இரவு அவர்களுடைய வீட்டில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் அப்பு நாங்கள் ஆசிரமத்திற்குத் திரும்புவோம் என்று கூறினார். நான் அப்புவை சக்கரநாற்காலியில் வைத்து தள்ளியபடி ஆசிரமத்திற்குப் போவதற்கு வீதியை நோக்கி வந்த பொழுது திருமதி நவரெட்னம் கண்ணீர் மல்க மிகவும் கவலையுடன் அப்புவிற்கு முன்னால் வந்து நின்றார். அப்பு உடனே அவரைப் பார்த்து “நான் அவனை (திரு. திருநாவுக்கரசு) விட்டு வர ஏலாது. செஞ்சோற்றுக் கடன்” என்றார். அவர் அழுதபடி எங்களுடன் ஆசிரமத்திற்கு நடந்து வந்து அப்புவுடன் நெடுநேரமாக மாலை வரை அமர்ந்திருந்தார். அப்பு அவருக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.
எனது நினைவிற்கு வந்த ஒரு சில சம்பவங்களில் ஒன்று, பல்வேறு மக்கள் அப்புவிடம்வந்து ஆசீர்வாதங்கள் பெற்று அவருக்கு பலவிதமான காணிக்கைகள்/பழங்கள்/உடைகள் /பணம் போன்றவற்றை வழங்கினார்கள். அவர்கள் ஆசிரமத்தைவிட்டு வெளியேறியதும் அப்பு அவர்களால் வழங்கப்பட்ட அனைத்து காணிக்கைகளையும் என்னைக் கொண்டு எடுக்க வைத்து அவற்றை மாட்டுக் கொட்டிலுக்கு அருகில் உள்ள இலுப்பை மரத்தின் அடியில் போட்டு எரிக்கும்படி கட்டளையிட்டார். நான் இதை செய்யும் பொழுது அருகில் சக்கரநாற்காலியில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பார். அப்பு அந்தப் பொருட்களை எரித்த பிறகு தனது உடல் பாரம் குறைந்ததாகக் கூறுவார்.
ஒரு முறை நாங்கள் சக்கரநாற்காலியைக் கொண்டு வெளியில் செல்லத் தயாராகியபடி ஆசிரமத்தைவிட்டு வெளியில் வந்து ஆசிரமத்திற்கு முன்னால் நின்ற வேப்ப மரத்தின் கீழ் சக்கரநாற்காலியை நிறுத்திய பொழுது எனக்கு தறுமு மாமா போட்ட பெரிய சத்தத்தைக் கேட்கக் கூடியதாக இருந்தது. நான் உடனே ஆசிரமத்தின் வெளிச்சுவருக்கு மேல் எட்டி தறுமு மாமாவை முழுமையாகப் பார்க்க முயன்ற பொழுது அப்பு நான் ஆவலுடன் எட்டி பார்ப்பதைக் கண்டு என்னைக் கூப்பிட்டு யாரையும் நீ புறக்கணிக்காதே, உன்னிடம் இல்லாத திறமைகளை மற்றவர்கள் வைத்திருக்கும் பொழுது அவர்களுடைய திறமைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். (“தறுமு கத்துறான் எண்டு போட்டு அவனைத் தள்ளி வைக்கக்கூடாது. அவன் செய்வதை நீ செய்வாயா?”)
தறுமு மாமா மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். அவரின் சமூகத்தொண்டு, நேர்மை, விசுவாசம் அவரைப் போற்றத்தக்கது. மாலை நேரத்தில் அவர் அளவாக மது அருந்தி தன்னையும் அவரைச் சூழ்ந்து இருப்பவர்களையும் மகிழ்விப்பார். இரவு நேரங்களில் அப்புவுடன் தங்கிவிட்டு பகல் நேரங்களில் St.John’s கல்லூரிக்குச் சென்று எனது (Olevel) 10ஆம் வகுப்பு பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். பரீட்சைகள் முடிவடைந்தபின் முடிவுகள் அன்று அறிவிக்கப்படும் என்று தெரியவந்தது. நான் அன்று மிகவும் மனக்கவலையாக இருந்தேன். முக்கியமாக எல்லோருக்கும் எனது முடிவுகளை எப்படி சொல்லப் போகின்றேன் என்ற கவலையுடன் இருந்தேன். அன்று எனது மனநிலை மிகவும் சோர்வான நிலையில் இருந்தது. அன்று காலை அப்புவை சக்கரநாற்காலியுடன் காலைப் பயணம் செய்வதற்காக தயார் படுத்தினேன். அப்பு ஆசிரமத்தை விட்டு வெளிக்கிட்டதும் இடது பக்கமாகப் போவதற்குக் கை காட்டினார். நாங்கள் Dr.நடராஜாவினது வீட்டிற்கு (சிவபாக்கிய மாமி) சென்றோம். இந்த இடமும் அப்பு வழமையாக செல்லும் இடங்களில் ஒன்று. நான் எப்பொழுதும் அப்புவை அவர்களுடைய வீட்டிற்குள் கொண்டு சென்று விட்டபின் சக்கரநாற்காலியை அவர்களுடைய முன் விறாந்தையில் நிறுத்திவிடுவேன். அதன் பிறகு நான் உல்லாசமாக அவர்களுடைய வீட்டிற்குள்ளும் சமையல் அறைக்குள்ளும் சென்று வருவேன். ஆனால் அன்று நான் அப்புவை அவர்களுடைய வீட்டிற்குள் விட்டு விட்டு அவருக்கு பின்பக்கமாக நிலத்தில் இருந்து கொண்டு எனது 10ஆம் வகுப்பு முடிவுகள் எப்படி வரப்போகின்றன என்று நினைத்து கவலையுடன் இருந்தேன். திருமதி.நடராஜா (சிவ பாக்கிய மாமி) எனது அசாதாரணமான அமைதியைப் பார்த்து “என்ன சுவாமி இண்டைக்கு ஈஸ்வரன் வலு அமைதியாக இருக்கிறார்” என்று கேட்டார். அதற்கு அப்பு “அவனுக்கு இண்டைக்கு மறுமொழி வருகுது” என்று பதிலளித்தார். இது அப்புவிற்கும் தெரிந்துவிட்டது என்று மனம் சஞ்சலப்பட்டது. எனது பரீட்சை முடிவுகள் நல்ல முடிவுகளாகக் கிடைத்தன. நான் இவற்றைக் கொண்டு மருத்துவம் அல்லது பொறியியல் செய்யக் கூடிய வாய்ப்பு இருந்தது.
அடுத்த நாள் எனது தாயாரும் எனது அம்மம்மாவும் வழமை போல காலை தேநீர் அருந்தும் வேளையில் உரையாடிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். அதில் எனது அம்மம்மா எனது தாயாருக்கு என்னை மருத்துவம் படிக்க விடவேண்டாம், காரணம் நான் ஒரு முன் கோபக்காரன், நான் அனைத்து நோயாளிகளையும் ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என்று அறிவுறுத்தினார். நான் பொறியியல் படிக்க முடிவு எடுத்ததற்குக் காரணமும் இதுவே ஆகும். எங்களுடைய அம்மம்மா எங்களது வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளார். அவர் தான் எனது சிறுவயதில் எனக்கு ஒரு முன்மாதிரி வழிகாட்டியாக இருந்தார்.அவர் எனக்கு உதாரணத்தோடு நல்ல கதைகள் கூறி எனது உள்ளத்தைப் பலப்படுத்தினார். அவர் தனது பேரன்களைப் பிள்ளையார் கோவிலுக்கு அழைத்து சென்று எங்களது இளவயதிலேயே பிள்ளையார் கதையைப் படிக்கவைத்தார். பொதுவாகப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் கதை வயது வந்தவர்களால் படிக்கப்படும். பிள்ளையார் கதை ஒரு புராண இலக்கியம்.
நான் St.John’s கல்லூரியில் தடம் மற்றும் கள விளையாட்டு வீரராக இருந்தேன். விளையாட்டுப் போட்டி முடிந்த பின்பு நான் அப்புவை முதலில் சென்று பார்த்து எனது சான்றிதழ்களைக் காட்டுவேன். அப்பு சந்தோஷப்படுவதோடு அவர் எல்லோருக்கும் எனது சாதனைகளை வெளிப்படுத்துவார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்பு எப்பொழுதும் நான் எனது தலைமுடியை வைத்திருக்கும் விதத்தைப் பற்றி கருத்துகள் கூறுவார். எனது தலைமுடியும் எனது மூத்த அக்காவுடைய தலைமுடியும் மிகவும் சுருள் கொண்ட பரட்டையானது. இதனால் நாங்கள் அடிக்கடி எங்களுடைய சீப்புகளை உடைப்பதுண்டு. நான் எனது தலைமுடிக்கு எண்ணெயும் தண்ணீரும் தடவிப் படிய வைத்து நன்கு கோதிவிடுவேன். எனது தலைமுடியை எப்படி நான் அடக்கி வைத்திருக்கின்றேன் என்று அப்பு சந்தோஷமாக தனது கருத்தை வெளிப்படுத்துவார்;. நான் எப்பொழுதும் அப்புவின் பரிபூரணமான புகழ்ச்சியைக் கேட்டு, சந்தோஷப்படுவேன்.
ஒரு நாள் அப்பு Dr.குருசுவாமியுடைய சகோதரர் சுகயீனமாக Dr.குருசுவாமியினது வீட்டில் (கொட்டடி), யாழ்ப்பாணத்தில் இருப்பதைப் போய் பார்க்க விரும்பினார். நான் அப்புவுடன் கொட்டடிக்கு ஒரு மோட்டார் வண்டியில் சென்று அவருடைய படுக்கை அறையில் அவரைப் பார்க்கச் சென்றோம். அப்பு அவருக்கு சில சைகைகளைச் செய்து பிரியாவிடை கொடுத்தார். அதன் பின்பு நாங்கள் திரும்பி வந்துவிட்டோம். அடுத்த நாள் காலையில் Dr.குருசுவாமியுடைய சகோதரர் காலமாகிவிட்டார் என்று அவர்களின் குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டது. மற்றுமொரு நாள் நாங்கள் திரு.V.A.கந்தையாவை யாழ்ப்பாண வைத்தியசாலையில் சென்று பார்த்த பொழுது அப்பு அவருக்கும் அதே மாதிரியான சைகைகளைச் செய்து பிரியாவிடை கொடுத்தார். பின்பு நாங்கள் திரும்பி வந்த பொழுது நான் ஆசைமம்மியிடம் சென்று திரு.V.A.கந்தையா காலமாகப் போகிறார் என்று கூறினேன். ஆசைமம்மிக்கு நான் இப்படி வெளிப்படையாக கூறியது பிடிக்கவில்லை. அத்துடன் என்னை அமைதியாக இருக்கச் சொன்னார். அடுத்த நாள் காலை Dr. குரு சுவாமியுடைய மகன் சங்கரன் கொழும்புத்துறைக்கு வந்து திரு.V.A.கந்தையாவினது மரணச்செயதியை அறிவித்தார். இந்த இரண்டு இடங்களிலும் அப்பு செய்த சைகைகளை வார்த்தைகளால் விபரிப்பது மிகவும் கடினம்.
திரு.சிவபாதசுந்தரமும் திரு.இலங்கநாயகமும் தினமும் காலையில் அப்புவை வந்து தரிசிப்பார்கள். ஒரு நாள் காலையில் அப்பு வழமையான சக்கரநாற்காலியுடன் செய்யும் சவாரியில் திரு.சிவபாதசுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு ஐயர் கடைக்குப் போனார். அங்கு என்னைக் கொண்டு ஒரு முழு வாழைக் குலையை வாங்க வைத்து அதை திரு.சிவபாதசுந்தரத்தின் தோளில் வைக்க வைத்து இலந்தைக்குளம் வீதி வழியாக அவரை நடக்க வைத்தார் அப்பு. என்னைச் சக்கரநாற்காலியைத் தள்ளியபடி அவரைத் தொடர்ந்து போகும்படி கூறினார். அதன் பின்னர் திரு.சிவபாதசுந்தரத்தைப் பார்த்து கொழும்புத்துறைக்குத் திரும்பவும் வரவேண்டாம் என்று ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்தார்.
அப்புவுடைய அடியார்களில் ஒருவரான திரு.K.தணிகாசலம் என்பவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கணித பட்டத்தை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று PhDயை இங்கிலாந்தில் சென்று படிப்பதற்கு அவருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. திரு.மு.தணிகாசலம் புங்கங்குளம் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து கொழும்பிற்கு ரயில் மூலம் பயணம் செல்வதற்கு முன்பு அப்புவிடம் வந்து பிரியாவிடை பெற வந்தார். அவர் அப்புவிற்கு முன் நின்று பிரியாவிடை பெறும் பொழுது அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் குழாயிலிருந்து ஓடும் தண்ணீரைப் போல் வந்தன. அப்பு என்னிடம் ஆசிரமத்தில் உள்ள பஞ்சாலாத்தியில் கற்பூரத்தை வைத்து கொளுத்தும்படி கேட்டுக் கொண்டார். நான் அதன்படி அதை கொளுத்தியதும் திரு.K.தணிகாசலத்தை இந்த எரிகின்ற கற்பூரதீபத்தை அணைக்கும்படி கேட்டுக் கொண்டார். திரு.K.தணிகாசலம் தன்னால் முடியும் வரை அணைக்க முயன்றார். ஆனால் அவரால் ஒரு தீபத்தைக் கூட அணைக்கமுடியவில்லை. அப்பு உடனே “உனது பயணம் பாதுகாப்பாக இருக்கட்டும். நான் எப்பொழுதும் உன்னோடு தான் இருக்கின்றேன்” (“போய்வாரும் காணும். நான் உம்மோடுதான் இருக்கின்றேன்”) என வாய் மலர்ந்தார்.
அப்பு எனக்குத் “தையல் நாயகி” என்ற பாடலைக் கற்றுக் கொடுத்து அதை தினமும் (1961-1964) என்னைப் பாடவும் வைத்தார். அப்பொழுது நான் நினைத்தேன், இப் பாடல் அப்புவுடைய நற்சிந்தனைப் பாடல்களில் ஒன்று என்று. பின்பு நான் எனது உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றபின் நான் அப்புவைப் பற்றிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்கும் பொழுது அவற்றில் இருந்து நான் கற்றுக் கொண்டது “தையல் நாயகி” என்ற பாடல் அப்புவின் பரமகுரு கடையிற்சுவாமிகளுடன் நெருங்கிய கருத்துத் தொடர்பு கொண்ட பாடல் எனப் புரிந்தது.
எனது St.John’s கல்லூரி வருடாந்த இரவு உணவு விழாவின் பின் நான் எனது பிளேஸர், டையுடன் அப்புவிற்கு முன்னால் இரவு பைலட் ஒளியின் நிழலின் கீழ் நின்று “Good morning சுவாமி” என்று அவரை வாழ்த்துவேன். அப்பு எப்பொழுதும் வெளிநாட்டில் இருந்து வரும் மக்களைத் தான் அவர் “Good morning’ என்று வாழ்த்துவார். அப்பு என்னை தனக்கு அருகில் வரவழைத்து எனது பிளேஸரைத் தொட்டுப் பார்த்து நான் அழகாக இருப்பதைப் பாராட்டினார். அப்பு எப்பொழுதும் நேர்த்தியான உடை, புத்திசாலித் தனம், ஒழுக்கம் முதலிய நற்குணங்களை ஆதரித்துப் போற்றுவார். ஒரு சம்பவம் எனது நினைவில் இருக்கின்றது. ஒரு இரவு அப்பு படுக்கையில் இருக்கும் பொழுது மலம் கழிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவருக்கு அவருடைய முழு ஆடைகளும் மாற்றப்பட்டு அவரை குளிப்பாட்டி, படுக்கை விரிப்புகளையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்பொழுது நான் அப்புவை தூக்கிக் கொண்டு சென்று குளிப்பாட்டினேன். அதன் பிறகு அவருக்கு யார்ட்லி பவுடர், ஓடி கோலோன் போட்டு அவருக்கு புத்துணர்ச்சியூட்டினேன். அப்பொழுது அப்பு “டேய் நான் கலியாணம் முடித்தது போல் இருக்குதடா” என்று கூறினார். நான் அவரின் மனப்பூர்வமான சந்தோஷமான வார்த்தையால் அவர் நன்றாகவும் சுகமாகவும் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.
இரவு நேரங்களில் நான் அப்புவிற்கு அருகில் நிலத்தில் படுப்பேன். அப்பு கட்டிலில் படுப்பார். ஒரு முறை நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது அப்பு தனது சிறுநீர் போத்திலை எனக்கு மேல் என்னை எழுப்புவதற்காக எறிந்தார். நான் உடனே எழும்பி அப்புவுடன் கடுமையான கோபம் கொண்டு பக்கத்தில் உள்ள அறைக்குள் சென்று தங்கினேன். அப்பு என்னைப் பல தடவை கூப்பிட்டார் நான் அதற்குப் பதிலளிக்கவில்லை. அதன் பின்னர் அப்பு மிகவும் அன்புடன் “ஈஸ்வரா! ஈஸ்வரா! தம்பி!” என்று திரும்பத் திரும்பக் கூப்பிட்டார். அதன் பிறகு நான் அவரிடம் சென்று அவருக்கு தேவையானவற்றை செய்து குடிப்பதற்கு வேண்டிய நீராகாரம்; கொடுத்துவிட்டு பின்பு நாங்கள் நித்திரை செய்தோம்.
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது இது நடந்தது ஒரு வியாழக்கிழமை இரவு அதிகாலை வெள்ளிக்கிழமை. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் அப்புவைப் பார்க்க பலர் கொழும்பில் இருந்து வந்தார்கள். அப்பு இருந்த அறை முழுவதும் மக்களால் நிரம்பி இருந்தது. ஆசை ஐயா திருவாச கத்தைப் பாட ஆரம்பித்துப் பின்பு அதைத் தொடர்ந்து நற்சிந்தனைப் பாடல்களையும் தேவாரங்களையும் பாடினார். எதுவும் நடக்காத ஒரு கணம் ஆசிரமம் மௌனமாக இருந்தது. அப்பொழுது அப்பு சத்தமாக என்னைப் பார்த்து “இவருக்கு எல்லோ இராத்திரி என்னிலை கோவம் வந்துவிட்டது” என்று கூறினார். அப்பொழுது எனக்கு அந்த கூட்டத்தின் முன் நான் மிகவும் சின்னவனாகக் கூனிக் குறுகி நின்றேன். இதன் பின்னர் நான் ஒருநாளும் எனது கோபத்தை அப்புவிடம் காட்டியதில்லை. எனக்கு இது ஒரு சிறந்த பாடமாக அமைந்தது.
நானும் சின்னண்ணையும் திருவை (திருமகள்) “எடியேய்” என்று கூப்பிட்டு ஏளனம் செய்வோம். ஒரு நாள் அப்புவிடம் திரு சென்று நாங்கள் இருவரும் “எடியேய்” என்று தன்னைக் கூப்பிட்டு ஏளனம் செய்து அவமானப்படுத்துகிறோம் என்று முறையிட்டா. அப்பு அதற்கு அவவிடம் “வடக்கு இந்தியாவிலுள்ள பிராமணர்கள் தங்களுடைய தாய்மார்களை “எடியேய்” என்று அன்பாகக் கூப்பிடுவார்கள். இதைப் போல் தான் உனது அண்ணன்மார்களும் உன்னை கூப்பிடுகிறார்கள்” என்று கூறினார். அதன் பின்பு திரு அப்புவிற்கு முன் அவர் கொடுத்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டா.
நான் எப்பொழுதும் எனது இரவு உணவை எங்கள் வீட்டில் உட்கொண்டு விட்டுத் தான் எனது இரவுக் கடமைகளை அப்புவிற்கு செய்வேன். ஒரு குறிப்பிட்ட நாளில் எனது தாயார் நல்ல சுவையுடன் விளைமீனை எனது பாட்டாவிற்காகவும் மற்றும் அனைத்தும் குடும்பத்தினருக்காகவும் சமைத்தார். எனது தாயார் சைவ உணவு மட்டும் தான் உண்பவர். அன்று எனக்கு மீனை உட்கொள்ளுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
எனக்கு எனது தாயார் இடியப்பமும் சொதியும் தான் கொடுத்தார். அவர் என்னிடம் நான் அப்புவுடைய ஆசிரமத்தில் தங்கி அப்புவைக் கவனிப்பதால் எனக்கு அசைவ உணவு கொடுக்கவில்லை என்று கூறினார். நான் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக் கொண்டு வழமை போல் சைவ உணவை எங்கள் வீட்டிலுள்ள சைவ சமையல் அறைக்குள் இருந்து உட்கொண்டு விட்டு அப்புவிடம் சென்றேன். நான் ஆசிரமத்தை அடைந்த பின்னர் அப்பு என்னிடம் முதல் தடைவையாக கேட்ட கேள்வி “நீ இன்று என்ன சாப்பிட்டாய்” என்று. நான் அதற்கு எனது தாயார் எனக்கு மட்டும் இடியப்பமும் சொதியும், மற்றவர்களுக்கு மீன் என்று கூறினேன். அப்பு அதற்கு “ஏன் உனக்கு மட்டும் அதைக் கொடுத்தா?’ என்று கேட்டார். நான் அதற்கு “நான் உங்களுடன் வந்து நிற்பதால் எனக்கு அசைவ உணவு உட்கொள்ளுவதற்கு அனுமதியில்லை” என்று கூறினேன். அப்பு ஒன்றும் கூறவில்லை. நான் தொடர்ந்து எனது அப்புவிற்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலையில் எனது பாட்டா திரு.பொன்னம்பலம் அவர்கள் ஆசி ரமத்திற்கு வந்து அப்புவிற்கு கடமை செய்யும் பொறுப்பை என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டு என்னை எனது கல்லூரிக்குப் போவதற்கு அனுப்புவார். அன்று அப்பு அவரைக் கூப்பிட்டு “பொன்னம்பலம் அவங்கள் விரும்புவதை சாப்பிடவிடு” என்று கூறியதுடன் “மீன் கடல் தரும் திரவியம். அவங்கள் சாப்பிடட்டும்”. என்று கூறினார். எனது பாட்டாவிற்கு எதற்காக அப்பு தன்னிடம் இதைக் கூறுகிறார் என்பது அவருக்கு தெரியாது. அப்பு அவருக்கு கூறியதை நான் கேட்கும் பொழுது எனது காதுகளுக்கு அது இனிமையாக இருந்தது. நான் எங்கள் வீடு சென்றதும் எனது தாயாரிடம் “நான் இனிமேல் மீன் உட்கொள்ளுவதற்கு அப்பு அனுமதி வழங்கிவிட்டார்” என்று கூறினேன். அவ என்னிடம் ஒன்றும் கூறவில்லை. அவ உடனடியாக வீட்டிற்கு வெளியில் சென்று ஒரு வேலியிலுள்ள ஒரு தடியை முறித்து எனக்கு அடித்துவிட்டு “ஏன் நீ இதையெல்லாம் அப்புவிடம் சொன்னாய்” என்று கூறினார். அவர் தொடர்ந்து எனக்கு சைவ உணவுகளையே கொடுத்தார். அப்புவுடைய அனுமதியை அவவால் மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனது பாட்டா காலை நேரங்களில் எனது பொறுப்பை தான் ஏற்க வரும் பொழுது அவருடைய பூட்டி வசந்தியையும் (வசந்தி எனது மூத்த அக்கா திருமதி S.வரதராஜாவுடைய மூத்த மகள்) கூட்டிவருவார். எனது மூத்த அக்காவிற்கு இரண்டாவது மகள் சுகந்தி பிறந்த பின்னர் அப்பு எனது பாட்டாவிடமும் எனது மூத்த அக்காவிடமும் இவர்களுடைய பெயர்களை மாற்றும்படி கூறி வசந்திக்கு ஆனந்தவல்லி எனவும் சுகந்திக்கு அமிர்தவல்லி எனவும் பெயர்கள் சூட்டினார். இதைத் தொடர்ந்து எனது மூத்த அக்கா அப்புவுடைய மறைவிற்குப் பின்னர் பிறந்த அவவுடைய மூன்றாவது மகளுக்கு அற்புதவல்லி என்றும் நான்காவது மகளுக்கு அம்புஜவல்லி என்றும் பெயர்கள் வைத்தார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் Dr.ஜேம்ஸ் ஜோர்ஜ் (Dr.James George) தனது உத்தியோகத்தை முடித்த பின்னர் கனடாவிற்கு போகும் முன்னர் அப்புவைக் கொழும்புத்துறைக்கு வந்து சந்திக்க விரும்பினார். இந்தக் கனேடிய உயர்ஸ்தானிகரை மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Rt.Hon.Ramsbotham) என்பவரால் அப்புவுடைய விபத்திற்கு முன்னர் 1961ஆம் ஆண்டில் அப்புவிற்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
அப்பு என்னைக் கொண்டு கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் தேநீர் கொடுக்க வைத்தார். கனேடிய உயர்ஸ்தானிகருடைய மகள் தமிழ் பாரம்பரிய உடையான பாவாடை சட்டையை அணிந்திருந்தார். அப்புவிற்கும் கனேடிய உயர்ஸ்தானிகருடைய குடும்பத்தினருக்கும் இடையில் நடந்த உரையாடல் மிகவும் உணர்ச்சிமிக்க உரையாடலாக இருந்தது எனது நினைவில் இருக்கின்றது. அவர்கள் கனடாவிற்கு யாழ்ப்பாணம் விமானநிலையத்திலிருந்து இந்தியாவினுடாக டொரொன்டோவிற்குப் (Toronto) பயணம் செய்தனர்.
கிழக்கு நாடுகளில் இருந்தும், மேற்கு நாடுகளில் இருந்தும் வந்து அப்புவை தரிசித்த அடியார்கள் அப்புவின் தெய்வீக ஆத்ம ஞானத்தைப் பெறக் கூடியதாக இருந்தது.அப்பு அவருடைய அடியார்கள் கொண்ட ஒரு கூட்டத்தை மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு சைவசமய நெறிகளை எடுத்துச் சொல்லுவதற்காக அனுப்பிவைத்தார். மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Rt. Hon.Ramsbotham), திரு.மு.சச்சிதானந்தா, திரு.திருமதி நவரெட்னம், மற்றும் திரு.மு.மு.நடராஜா ஆகியோரை சைவசித்தாந்தங்களை இங்கிலாந்திற்கும் மலேசியாவிற்கும் எடுத்துச் சொல்லுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Rt.Hon.Ramsbotham) என்பவருக்கு அப்பு 30-12-1983 ஆருத்திரா தரிசனத் தன்று சில கிரிகைகளோடு தீட்சை வைத்து சந்தசுவாமிகள் என்னும் பெயர் சூட்டினார். இச் சம்பவம் எனது வாழ் நாளில் மிகவும் பிரதானமாகும்.
தீட்சை, திருவெம்பா இறுதி நாளான ஆருத்திரா தரிசன திருவாதிரை நட்சத்திரத்தில் அப்புவின் கொழும்புத்துறை ஆசிரமத்தில் நடைபெற்றது. நான் எப்பொழுதும் எனது தாயாருடன் எங்களுக்கு அருகாமையில் உள்ள பிள்ளையார் கோவிலுக்குச் சென்று திருவெம்பா பாடல்களைப் பாடுவேன். கோவில் வழிபாடுகள் முடிந்த பின்னர் நானும் எனது தாயாரும் அப்புளிடம் செல்லுவோம். நான் தொடர்ந்து அப்புவுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை வழமைபோல் அன்றும் செய்யத் தொடங்கினேன். அதேநேரத்தில் எனது தாயார் அப்புவை வந்து பார்த்த பின்னர், அவ்வுடைய சகோதரியை (திருமதி திருநாவுக்கரசு ஆசைமம்மி) பார்க்கச் சென்று விட்டுவார். அவ வழமைபோல் காளைக் கோப்பியை நன்கு ரசித்துச் சுவைத்துக் கொண்டு இருக்கும் பொழுது அப்பு என்னை அழைத்து எனது தாயாரை தின்று அலவுடைய சகோதரியுடன் சேர்ந்து 10 நபர்களுக்குத் தேவையான உணவைச் சமைக்கும்படி சொல்லச் சொன்னார், “கொம்மாவை இங்கு நின்று 10 பேருக்குச் சமைக்கச் சொல்லு” அப்பு என்னிடம் கூறியதை நான் இரு சகோதரிகளிடம் (எனது தாயார் மற்றும் ஆசைமம்மி) கூறினேன். இப்படிப்பட்ட அப்புவுடைய வேண்டுகோள்கள் ஒன்றும் புதியவையல்ல. இவர்களால் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தவேளையில் ஆசை ஐயா பூநகரியில் இருந்தார். ஆசைமம்மி தங்களுக்கு சமைப்பதற்கு மரக்கறிகள் தேவைப்படுவதாகக் கூறினார்.
நான் அருகில் உள்ள ஐயர் கடைக்குச் சென்று தேவையான மரக்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.
சரி காலை 10.00 மணி இருக்கும், எனக்கு ஆசிரமத்திற்கு வெளியில் உள்ள தண்ணீர் குழாய் திறந்து தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டது. நான் சென்று பார்க்கும் பொழுது மதிப்புக்குரிய ராம்ஸ்போதம் (Rt.Hon. Ramshotham) தனது கால்களைத் தண்ணீர்க் குழாயில் இருந்து வரும் தண்ணீரில் கழுவியபடி நின்றார்.
நான் உடனே அப்புவிடம் சென்று கூறிய பொழுது அப்பு “வந்துவிட்டான்! வந்துவிட்டான்!” என்று சந்தோஷத்துடன் எத்தமாக கத்தியபடி என்னிடம் பின்வரும் வரிசையில் வழிமுறைகளை செய்யும்படி கட்டளையிட்டார்..
1.மதிப்புக்குரிய ராம்ஸ்போதத்தினுடைய(Rt.Hom.Ramsbotham) உடைகளை அகற்றுதல்.
- அவருடைய உடைகளை நன்கு துவைத்து உலர வைத்தல்.
- அவரைக் குளியல் அறைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டல்.
- திருநீற்றை அவருடைய உடல் முழுவதும் பூசுதல்.
- அவருக்குப் புது ஆடைகளை அணிவித்தல்.
- என்னிடம் கொடுக்கப்பட்ட உத்தரவின்படி பஞ்சாலாத்தியில் கற்பூரத்தை ஏற்றி அவருக்கு தீபம் காட்டி பூசை செய்தல்.
இந்தச் செயல்முறைகள் அனைத்தும் நிறைவேறிய பின்னர் அப்பு அவரைப் பார்த்துக் கூறியது பின்வருமாறு:
“இன்று முதல் நீ ஒரு சன்னியாசி (சன்னியாசி என்பவன் தனது அனைத்து உடைமைகள், வாழ்கை, ஆள்மா ஆகியவற்றை கடவுளுக்கு அர்ப்பணித்தவன் ஆவான்) மற்றும் இன்று முதல் நீ சந்தசுவாமி என்று அழைக்கப்படுவாய்’.
எனது தாய், ஆசைமம்மி ஆகியோரின் கட்டளையின்படி நான் இரு சுவாமிகளுக்கும் இடையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன். இச் சடங்குகள் நடந்த பின்னர் எல்லா திசைகளிலும் இருந்து மக்கள் மெதுவாக வந்து சேர்ந்தனர். வந்தவர்களின் எண்ணிக்கை சரியாக 10 ஆக இருந்தது. அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. வந்தவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
1.ஆசை ஐயா (திரு.திருநாவுக்கரசு) அப்பொழுது பூநகரியில் இருந்து வந்தார்.
2.திரு.தெய்வேந்திரம் (ஸ்ரீலங்கா புத்தகசாலையின் உரிமையாளர்)
3+4. திரு திருமதி நவரெட்ணம் தம்பதியர்
5+6. Dr.திருமதி நடராஜா தம்பதியர்
7+8. Dr திருமதி பசுபதி தம்பதியர்
9. Dr.ஜெகதீசன் பசுபதி
- நான் (ஈஸ்வரன் )
சந்தசுவாமிகளை அருகில் உள்ள Drநடராஜாவினது வீட்டிற்கு ஓய்வு எடுப்பதாக அனுப்பி வைக்கப்பட்டார். மாலை நேரத்தில் நானும் அப்புவும் அவரைச் சென்று பார்த்து அவருடன் தேநீர் அருந்தியிட்டு வந்தோம்.






