ஈஸ்வரனின் பூர்வ சம்பவங்கள் – ஞாபகங்கள்

Markandu Swamy (29/1/1899-29/5/1984).

அப்புவை 1914ஆம் ஆண்டில் ஆசை ஐயாவின் (திரு.திருநாவுக்கரசு) தாயாரால் அழைக்கப்பட்டு தங்களது மூதாதையாரின் காணியிலுள்ள குடிசைக்குள் வந்து தொடர்ந்து தியானம் செய்யுமாறு கேட்டு கொண்டார்கள். அப்பு அவர்களுடைய வேண்டுதலுக்குச் சம்மதம் கொடுத்து தொடர்ந்து தியானம் செய்து அப்பு மகாசமாதி யடையும்வரை அந்த இடத்திலேயே இருந்தார்.

திரு.திருநாவுக்கரசுவை தை மாதம் 1940இல் எனது சின்னம்மா பரிமளரெட்னம்; திருமணம் முடித்ததில் இருந்து எங்களது அப்புவுடனான நெருங்கிய தொடர்பு ஆரம்பித்தது. 

எனது தாயார் பாக்கியரெட்னமும் ஆசைமம்மியும் (திருமதி பரிமளரெட்னம்.திருநாவுக்கரசு) தான் ஒரே பிள்ளைகள் பொன்னம்பலம் தம்பதியருக்கு. இவர்கள் கொழும்புத்துறையில் இருந்தார்கள். இந்த இரு

சகோதரிகளின் ஆரம்பக் கல்வி மலேசியாவில் இருந்தது. அக் காலகட்டத்தில் திரு.பொன்னம்பலம் மலேசியாவில் உத்தியோகம் செய்ததால் முழுக் குடும்பமும் மலேசியாவில் வசித்து வந்தது. எனது தாயார் 5 பிள்ளைகளைப் பெற்றார். அவரது சகோதரி (ஆசைமம்மி) 3 பிள்ளைகளைப் பெற்றார். நாங்கள்

அனைவரும் 8 பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பமாக வளர்ந்து வந்தோம். பிள்ளைகளின் பெயர்கள்:-

  1. சிவயோகரெட்னம் (அக்கா)
  2. செந்தில்செல்வம் (சின்ன அக்கா)
  3. சிவயோகநாதன் (அண்ணை)
  4. திருஞானசம்பந்தன் (சின்ன அண்ணை)
  5. சிவயோகஈஸ்வரி (யோகி அக்கா)
  6. சிவயோகஈஸ்வரன் (ஈஸ்வரன்)
  7. திருமகள் (திரு)
  8. சிவயோகன் (யோகன்)

எனக்கு நினைவுக்கு வந்த முதல் நாளில் இருந்து நாங்கள் யோகசுவாமிகளை அப்பு என்று அழைத்து அவரையும் எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பேணி வந்தோம். அப்புவுடைய உபதேசங்கள், பாசம், கல்வி, நல்வழிகள் எங்களை எப்பொழுதும் சரியான பாதையை கைக்கொள்வதற்கு வழி காட்டின.

அப்பு தான் ஒரு கடவுளின் மறுபிறவி என்பதை உணராதபடி எங்களைப் பாதுகாத்ததன் மூலம் நாங்கள் அவருக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் எங்கள் அன்பை விசுவாசத்தோடு அவருக்குச் செய்ய வேண்டிய சேவைகள் எல்லாம் செய்யக் கூடியதாக இருந்தது. எங்களது தந்தையாருடைய (திரு. S.கந்தையா) இளவயது மரணம் எங்களை மிகவும் குடும்பத்திற்குள் நெருக்கமாக்கியது. அப்பு எங்களை அன்றாட வீட்டுவேலைகளைச் செய்ய வைத்தார். அதைத் தொடர்ந்து சமயக்கல்வியையும் சமஸ்கிருதத்தையும் கற்பித்தார்.