செல்லப்பா சுவாமிகள்

1915 பங்குனி அஸ்வினி நட்சத்திரத்தில் செல்லப்பா சுவாமிகள் மகாசமாதியடைந்தார்.

செல்லப்பாசுவாமிகள் (1860-1915)

செல்லப்பாசுவாமிகள் முன்கூட்டியே தனது அடியார்களுக்கு சில நாட்களில் ஒரு நாடகத்தை பார்க்கப் போகின்றீர்கள் என்று கூறி, அவர் மகாசமாதியடைவதை மறைமுகமாகத் தெரிவித்திருந்தார். அவர் தனது உடலை தகனம் செய்யுமாறு அவருடைய மருமகன் சபாரெட்ணம் என்பவரிடம் கூறியுள்ளார். அவருடைய விருப்பத்தின்படி சபாரெட்ணம் அவருடைய இறுதிச் சடங்குகளைச் செய்து அவருடைய புனித அஸ்தியை கடலில் கரைத்தார்கள்.

    நல்லூரில் உள்ள செல்லப்பாசுவாமிகள் வாழ்ந்த குடிசை பாதுகாக்கப்பட்டு கற்களால் கட்டி எழுப்பப்பட்டு ஒரு ஆசிரமாக உருவாக்கபட்டது. அதில் தினசரி பூசைகள், மாதப் பூசைகள் அத்துடன் வருடாந்தப் பூசை களும் தொடர்ந்து அவருடைய குடும்பத்தவர்களாலும் கோவில் பூசாரிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றன. நற்சிந்தனைப் பாடல்களும் திருவாசகமும் ஒவ்வொரு நாளும் அவருடைய ஆசிரமத்தில் ஓதப்பட்டு வருகின்றன. செல்லப்பா சுவாமிகளுடைய ஆன்மீக வழிகாட்டுதல் மூலமாக யோகசுவாமிகளுடைய முதிர்ச்சி நிலையை அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. யோகசுவாமிகள் ஒரு ஆன்மீக வாரிசாக ஆகி அவரது வழிகாட்டுதலை நாடிய பத்தர்களுக்கு சிவன் அருள் உணர்வின் வெளிச்சத்தை அவர்களுக்குள் உணரவைத்தார்.

     யோகசுவாமிகள் தியானத்தில் இருந்த இலுப்பை மரத்திற்கு எதிரில் உள்ள காணி திரு.திருமதி சம்பந்தன் குடும்பத்தினருடையது. திரு. சம்பந்தன் அவர்கள் 1910இல் அவருடைய ஒரே மகன் திருநாவுக்கரசு பிறந்தவுடன் காலமாகி விட்டார். 1914இல் திருமதி தங்கம்மா சம்பந்தன் அவருடைய சகோதரர் திரு.வல்லிபுரம் (உடையார்), அவருடைய சகோதரரின் மனைவி திருமதி வல்லிபுரம் (இவர் விதானையார் திருஞானசம்பந்தரின் சகோதரி) ஆகியோருடனும் தனது ஒரே மகன் திருநாவுகரசுடனும் (4 வயது சிறுவனாக) யோகசுவாமிகளிடம் சென்று தங்களுடைய காணிக்குள் உள்ள காலியான சிறு குடிசைக்குள் வந்து காலவரையின்றி தங்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்த வேண்டுதலை சிறந்த குணம் கொண்ட ஒரு பெண்மணியால் (தூய்மையான அப்பாவி மற்றும் தாராள மனம் கொண்டவர்) கேட்கப்பட்டதால் யோகசுவாமிகள் அக் குடிசைக்குள் வந்து இருப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். பின்பு இக் குடிசை எல்லா மக்களாலும் வெவ்வேறு சூழ்நிலையில் இருந்து வந்தவர்களாலும் மிகப்பண்புடன் எப்பொழுதும் விழுந்து கும்பிடுகின்ற தெய்வீக இருப்பிடமாக மாறிவிட்டது.

குடிசைக்கு முன் திரு.திருநாவுகரசு (அவரது 40களின் ஆரம்பம்)

இக் குடிசை மிகவும் பழைமையானது. அத்துடன் அதன் தரை, மண் தரையாகவும் கூரை கிடுகுக் கூரையாகவும் இருந்தது. சில காலங்களின் முன் நன்னியர் என்பவர் அந்த குடிசையை ஒரு கடையாகப் பயன்படுத்தியுள்ளார். அந்த நன்னியர் செல்லப்பாசுவாமிகளிடம் முரட்டுத்தனமான பக்தி வைத்தவராக இருந்துள்ளார். ஒரு முறை செல்லப்பாசுவாமிகள் அக் குடிசை வழியாகச் செல்லுகின்ற பொழுது நன்னியர் செல்லப்பாசுவாமிகளை அக் குடிசையிலுள்ள ஒரு தூணில் கட்டிவைத்து தனது கடையிலுள்ள விளக்கை ஏற்றி கற்புரம் காட்டி அவருக்கு பூசை செய்துள்ளார். அதன்பின் அக் குடிசை இருந்த இடம் மிகவும் புனிதமான மாறியுள்ளதாக நம்பப் படுகின்றது. சுவாமி விவேகானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த பொழுது அவர் இடமாக அமர்ந்திருந்த வண்டி குடிசை இருந்த வழியாக (கொழும்புத்துறை வீதி) செல்லும் பொழுது அவர் வண்டியை நிறுத்தும் படி கூறி அதில் இருந்து இறங்கி குடிசை இருந்த இடத்திற்கு அருகில் சென்று இந்த இடம் “பாலைவனப் பசுந்தரை” எனக் கூறினார்.

    ஒரு சிறிய சுவரால் அந்தக் குடிசை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இரண்டு அறைகளாக்கப்பட்டுள்ளது. யோகசுவாமிகள் தெற்குப்பக்கத்திலுள்ள அறையில் இருந்து கொண்டு வடக்கு பக்கத்தில் உள்ள அறையை தனது பிரார்த்தனைக்குரியதாகவும் தனது ஆடைகள் வைப்பதற்காகவும் பாவித்தார்.கொழும்புத்துறை பிள்ளையார் கோவிலுடைய பூந்தோட்டம் யோகசுவாமிகளுடைய குடிசைக்கு எதிர்ப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் எல்லைச் சுவருடன் இருந்தது. யோகசுவாமிகள் செல்லப்பாசு வாமிகளுடைய திருவடியை அந்த இடத்தில் வைத்து தனது வழிபாட்டைத் தொடர்ந்தார். கொழும்புத்துறையிலும் நல்லூரிலும் உள்ள செல்லப்பாசுவாமிகளுடைய அடியவர்கள் யோகசுவாமிகள் ஆன்மீக பாதையில் போவதற்கு செல்லப்பாசுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்ட பின்னணிச் சம்பவங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள். யோகசுவாமிகளைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். அவர்கள் தங்கள் மனதில் யோகசு வாமிகள்மீது பக்தியை வைத்தும் வெளிப்படையாக ஒரு சினேகிதராகவும் அவருடன் பழகியும் வந்தனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் துரையப்பா என்பவர் (விபரம் பக்கம் 24-25). முன்னர் துரையப்பாவால் தேவாரங்கள் நல்லூர் கோவிலிலும் நல்லூர் தேரடியிலும் பாடப்பட்டன. பின்னர் யோகசுவாமிகள் கொழும்புத்துறை கொட்டிலைத் தனது இருப்பிடமாக/ஆசிரமாகக் கொண்ட தொடக்கத்தில் துரையப்பா தேவாரம் பாடத்தொடங்கிய நிகழ்ச்சியும் அச் சந்தர்ப்பமும் இந்த ஆசிரமம் ஓர் உயிருள்ள கடவுளின் கோவிலாக மாறக் காரணமாக அமைந்தது.

      கொழும்புத்துறை கொட்டிலை இருப்பிடமாகக் கொண்டு பின் இலுப்பை மரத்தின் கீழ் இருந்த போது இருந்த யோகநாதனின் நடை, உடை, பாவனைகள் எல்லாம் மாறி அவரின் தோற்றம், நடத்தை, முகபாவனைகள் யாவும் உலகின் பார்வைக்கு ஒரு அமைதியான சூழ்நிலையை உணர்கின்ற தன்மையை உருவாக்கியது.

      பகல் நேரங்களில் குடிசையைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தம் செய்வதில் யோகசுவாமிகள் ஈடுபட்டார். குடிசையின் வடக்கிலுள்ள அறையில் “திருவடி” வைக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்படும். யோகசுவாமிகள் வெளியில் தென்படும் பொழுது அவரின் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரியத் தொடங்கியது. அவருடைய பளபளக்கும் முகம், ஊடுருவும் கண்கள், வெண்ணிறம் பாயும் தாடி, வெள்ளியைப் போல் பளபளக்கும் வெள்ளை முடி, நன்றாக சீவி நேர்த்தியாக முடிந்த கொண்டையும்; அவருக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்தது. விபூதி அவருடைய நெற்றி முழுக்க பூசப்பட்டு இருக்கும். அத்துடன் நன்றாக மடிக்கபட்ட சால்வை அவருடைய தோளில் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும். எப்பொழுதும் ஒரு குடையை கையில் வைத்திருப்பார்.

   யோகசுவாமிகள் அடிக்கடி பிரபல்யமான சண்முகநாதன் புத்தகக்கடைக்கும் எல்லோராலும் நன்கு அறியப்பட்ட பூர்வீக மருத்துவர் கஸ்தூரி முத்துகுமாரையும் பார்க்கச் செல்லுவார். இவ் வைத்தியர் ஏழைகளுக்கும் வசதியில்லாதவர்களுக்கும் இலவசமாக வைத்தியம் பார்ப்பதோடு தூரமான இடங்களில் இருந்து வருபவர்களுக்கு பயணச் செலவுகளுக்குப் பணம் கொடுத்து அனுப்பி வைப்பார். அவரிடம் போகின்றவர்கள்; ஒரு நல்ல வைத்தியரிடம் இருந்து மருந்துகளை பெறுவதிலும் யோகசுவாமிகளின் ஆசீர் வாதங்களைப் பெறுவதிலும் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள்.