பப்பா (எனது தந்தை) சுகவீனம் காரணமாகத் தனது உத்தியோகத்தில் இருந்து முதல் தடவையாக ஓய்வு எடுத்து வீட்டில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். மம்மி (எனது தாய்) பப்பாவிற்கு கொடுப்பதற்காக மருந்துகளை எடுத்து ஆயத்தம் செய்யும் பொழுது அப்பு அங்கு வந்து அந்த மருந்துகளை தான் உட்கொண்டு விட்டு மம்மியிடம் “உனக்கு 5 சிவன்கள் இருக்கின்றார்கள். ஒரு குறைவுமில்லை” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதே நாளில் பப்பா நிம்மதியுடன் காலமானார். பப்பா இறந்த நாள் ஒரு சனிக்கிழமை என்று எனக்கு ஞாபகத்தில் இருந்தது. எனது மூத்த அண்ணாவும் (டாக்டர்.சிவயோகநாதன்) நானும் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் வியாழக்கிழமையும் அப்புவிற்கு எங்கள் வீட்டிலிருந்து தேநீர் கொண்டு செல்லுவது வழக்கமாக இருந்தது. பப்பா இறந்த பின்னர் வந்த முதல் செவ்வாய்கிழமை நாங்கள் தேநீர் கொண்டு செல்வதை செத்த வீட்டு துடக்கு முடியும் வரை தவிர்க்க வேண்டும் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. இறுதிச் சடங்கு நடந்து 31 நாட்கள் வரை சம்பந்தப்பட்டோர் கோவிலுக்கு போவதை தவிர்க்க வேண்டும் என்பது சம்பிரதாய கோட்பாடாக இருந்தது. அப்பு ஆசை ஐயாவிடம் (திரு.திருநாவுக்கரசு) நாங்கள் வராததன் காரணத்தைக் கேட்டு அவரை எங்கள் வீட்டிற்கு அனுப்பி எங்களை வழமைபோல் தேநீரைக் கொண்டு வரும்படியும் அவங்களுக்கு ஒரு துடக்கும் இல்லை யென்றும் சொல்லச் சொல்லியிருந்தார்.
அப்பு தேநீரை (கிறீம் கிராக்கர்/கோல்டின் பவ்) பிஸ்கட்டுகளுடன் விருப்பமாக அருந்துவார். அவர் தனது தேநீரை சிரட்டைக்குள் வைத்து பிஸ்கட்டுகளை அதற்கு மேல் வைத்து சாப்பிடுவார். இதனால் சாப்பிடும் பொழுது விழும் பிஸ்கட்டு துண்டுகள் தேநீருக்குள் விழுந்து சிரட்டையின் அடியில் போய் தங்கும். பின்னர் தேநீருக்குள் நன்கு ஊறிய பிஸ்கட்டு துண்டுகளை விருப்பமாக சாப்பிடுவார். எந்த ஒரு பிஸ்கட்டு துண்டுகளையும் வீணாக்கமாட்டார்.
காலையில் அப்புவிற்கு கொழும்புத்துறையிலுள்ள சில அடியார்கள் தேநீர் கொடுப்பதில் தங்களுக்குள் ஒரு நாட்களை தேர்ந்தெடுத்து கொடுத்து வந்தார்கள். இது எனது நினைவில் இருந்தது. நாங்கள் செவ்வாய் கிழமைகளிலும் வியாழகிழமைகளிலும் செய்து வந்தோம். திரு.சந்திரசேகரம் குடும்பத்தினர் புதன்கிழமைகளிலும் திருமதி சிவானந்தம் வெள்ளிகிழமைகளிலும் செய்து வந்தனர். இதே குடும்பத்தினரால் இரவு சாப்பாட்டிற்கும் இடியப்பமும் சொதியும் கொடுக்கப்பட்டன.
அப்பு எப்பொழுதும் ஆயுர்வேத மருந்துகளான தங்க எலாதி கொண்ட ஒரு மாத்திரையும் மிருது சஞ்சிவி கொண்ட இரண்டு மாத்திரைகளையும் குடிநீருக்குள் கரைத்து ஒரு சிரட்டைக்குள் விட்டு தேநீர் அருந்துவதற்கு முன் இதை அருந்துவார். அவர் அதை அருந்திய பின்னர் அந்த சிரட்டையின் அடியில் தங்க பொடிகள் பிரகா சிக்கும். நாங்கள் அவர் குடிக்கும் மாத்திரைகளை “ஒன்றும் இரண்டும்” மாத்திரைகள் என்று குறிப்பிடுவோம்.
நாங்கள் St.John’s கல்லூரியில் படிக்கும் காலத்தில் எங்களுடைய கல்லூரி சீருடைகளை (வெள்ளை சட்டையும் நீல நிற கால் சட்டையும்) அணிந்து தயாராகிய வண்ணம் அப்புவிடம் செல்வோம். அநேகமாக அப்பு அந்தக் காலை நேரத்தில் தனது ஆசிரமத்தைவிட்டு வெளிக்கிடுவார். அநேகமாக அப்புவை கூட்டிச் செல்வதற்கு அவருடைய பல அடியார்களில் ஒருவருடைய மோட்டார் வண்டியாவது வரும். பெரும்பாலான நேரங்களில் எங்களுக்கும் சில ஆடம்பரமான வண்டிகளில் அவருடன் பயணம் செல்லச் சந்தர்ப்பம் கிடைக்கும்.
எனக்கு நல்ல நினைவில் இருக்கின்றது ஒரு நாள் நாங்கள் St.John’s கல்லூரிக்குப் போவதற்காக தயாராகியபடி, அப்புவிடம் சென்று ஏதாவது ஆடம்பரமான வண்டியில் அப்புவுடன் பயணம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைப் பதற்காகக் காத்திருந்த பொழுது அப்பு அந்த வழியாகச் சென்று யாழ்ப்பாண மாநகர சபைக்குரிய வண்டியை நிறுத்தி (அந்த வண்டியானது மக்களின் மலக்கழிவுகளைச் சேகரித்து கடலுக்குக் கொண்டு செல்வது) அதில் தான் ஏறிக் கொண்டு, எங்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றார். அந்த வண்டி ஓட்டுனர் அப்புவை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றிச் சென்றார். அப்பு சிரித்தபடி எங்களைப் பார்த்து கையசைத்தபடி அதில் பயணம் செய்தார். சுத்தமான கல்லூரி சீருடையணிந்த எங்களால் அந்த வண்டியில் பயணம் செய்ய முடியவில்லை. காரணம் அந்த வண்டியிலிருந்து துர்நாற்றம் வீசியது. ஒரு ஆடம்பரமான வண்டியில் பயணம் செய்ய எண்ணி வந்த நாங்கள் ஏமாற்றத்துடன் கல்லூரிக்கு நடந்தே சென்றோம்.அப்பு அந்த வண்டியிலிருந்து எங்களைப் பார்த்து சிரித்தபடி பயணம் செய்தார்.
அப்பு எனது மூத்த அண்ணாவை ஒரு வட இந்திய பிராமணரான ராகவன் என்பவரைக் கொண்டு சமஸ்கிருதம்/உபநிஷத்துக்கள்/பகவத்கீதை ஆகியவற்றை படிக்கவைத்தார். எங்களுக்கு அப்பு சமஸ்கிருத பாடல்களைப்பாடப் பயிற்சி அளித்து எங்களைப் பாடவும் வைத்தார். எனது அண்ணையும் திருவும் சமஸ்கிருத தேர்வுகளில் நன்றாக தேர்ச்சி பெற்றனர். தேர்வுகளை நடத்தும் அலுவலகம் இவர்களைப் படம் எடுத்து பத்திரிகைகளில் வெளியிட விரும்பியது. அப்பு எந்த ஒரு விளம்பரங்களும் தேவையில்லை என்று அதை நிறுத்திவிட்டார். நாங்கள் அப்புவுடன் சேர்ந்து முற்றத்தைச் சுத்தம் செய்தல், குப்பைகளை அகற்றுதல், வேப்பம் விதைகளைப் பொறுக்குதல் போன்றவற்றை செய்து வந்தோம். அப்பு எங்களுக்கு ஒரு தேங்காய் சிரட்டை நிரம்ப வேப்பம் விதைகளைப் பொறுக்கி கொடுத்தால் ஒரு சதம் தருவார்.
நாங்கள் எங்கள் தந்தையை எங்கள் இளம் வயதில் இழந்த பின்னர் எங்கள் அம்மம்மாவினால் (தாயாருடைய தாயார் திருமதி தங்கம்மா பொன்னம்பலம்) எங்களுக்கு நன்றாகப் படிக்கவும், கடுமையாக வேலை செய்யவும் நல்ல பழக்கவழக்கங்களுடன் இருக்கவும் ஊக்கிவிக்கப்பட்டோம். அவர் அடிக்கடி நல்ல கல்வி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் நன்னடத்தை இல்லாதோரை ஒருவரும் மதிக்கமாட்டார்கள் என்று எங்களிடம் கூறுவார். அவர் குறிப்பாக திரு.V.A.கந்தையா அவர்கள் எங்களுடைய வீட்டிற்கு எங்களது தகப்பனார் இறந்த பின் வருவதை நிறுத்தியதைச் சுட்டிக் காட்டுவார். (திரு.V.A. கந்தையாவும் எங்களது தந்தை திரு.S.கந்தையாவும் உறவினர்கள். அவர் யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு தவறாமல் வருவார், அத்துடன் எங்களது தந்தையின் மறைவிற்குப் பின்னர் எங்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டார்.) எங்களது அம்மம்மம்மா அவரை ‘பெரிய கைகள்’ (செல்வந்தர்) என்று குறிப்பிடுவார். ஒரு நாள் நான் அப்பு செய்யச் சொன்ன வேப்பம் விதைகளை பொறுக்கும் வேலையை செய்து கொண்டு இருக்கும் பொழுது அப்பு என்னைக் கூப்பிட்டு என்னிடம் “திரு.V.A. கந்தையா எங்கள் வீட்டிற்கு சமீபத்தில் வந்தவரா?” என்று கேட்டார். நான் அதற்கு “இல்லை அப்பு” என்று பதிலளித்ததற்கு “ஏன்” என்று கேட்டார். நான் அதற்கு அவர்கள் “பெரிய கைகள்” என்று கூறினேன். உடனே அப்பு “என்னடா அவைக்கு நீண்ட கையா?” என்று சிரித்தபடி கேட்டார். அதே சமயத்தில் நான் ஒரு பெரிய கறுப்பு மோட்டார் வண்டி வந்து ஆசிரமத்திற்கு வெளியே நிறுத்தப்படுவதைப் பார்த்தேன். அதிலிருந்து திரு.V.A. கந்தையா இறங்கி வந்தார். அப்பு அவரை வரவேற்றபடி “நீ எங்கே போகின்றாய் கந்தையா” என்று கேட்டார். அதற்கு திரு.V.A. கந்தையா “நயினாதீவுத் தேர்த் திருவிழா” என்று பதிலளித்தார். அப்பு உடனே அவரிடம் என்னையும் கூட்டி செல்லும்படி கூறினார். திரு.V.A. கந்தையா என்னை எங்களது வீட்டிற்கு அழைத்து வந்ததும் நான் வெள்ளைச்சட்டையும் நீல கால்ச்சட்டையும் (St.John’s கல்லூரி சீருடை) அணிந்து தயார் ஆனேன். திரு.V.A.கந்தையா தனது வண்டியை ஊர்காவற்துறை கடற்படைத் தளத்திற்கு ஓட்டிச் சென்றார். அங்கு எங்களுக்கு கடற்படை கப்டனால் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு, ஒரு சிறப்புப் படகில் எங்களை நயினாதீவிற்கு அழைத்து சென்றார்கள். நாங்கள் நயினாதீவு கோவிலை அடைந்தபின்பு தான், குருக்கள் தேரை இழுப்பதற்கு அனுமதி வழங்கினார்கள். (அப்பொழுது திரு.V.A.கந்தையா அவர்கள் ஊர்காவற்துறை மற்றும் தீவுகளின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.) இப் பயணத்தில் கடற்படை அதிகாரிகளாலும் கோவில் குருக்களாலும் எனக்கு கிடைக்கப் பெற்ற உபசரிப்புக்களைப் பெரிதும் ரசித்தேன். அவர்கள் எல்லோரும் நான் திரு.V.A. கந்தையாவின் மகன் என்று நினைத்துவிட்டார்கள். நாங்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்போம்.
திரு.V.A.கந்தையாவும் எனது தந்தையும் யாழ்.குடா நாட்டுக்கு அருகில் உள்ள வேலணை கிற சிறிய தீவில் இருந்து வந்தவர்கள். அப்பு என்னையும் எனது சகோதரர்களையும் “தீவார்” என்று கூப்பிட்டு கிண்டல் செய்வார். அத்துடன் அப்பு தீவாரைப் பற்றிய சில கிண்டல் கூற்றுக்களைப் பாவிப்பார். “தீவாரே வாரும் திண்ணையிலே ஏறும். பனங்காயை சூப்பும்”, “உமல் மாறிகள்” – இது குறிப்பது என்ன என்றால் ஒரு தீவார் படகில் இருந்து இறங்கும் பொழுது சாதாரணமாக வேறொருவருடைய பையை எடுத்துக் கொள்ளுவார்; ஏனெனில் அதில் அதிக மதிப்புள்ள பொருட்கள் இருக்கலாம் என்று. அப்பு எங்களுக்கு பழைமையான பாரம்பரியத்தை நினைவூட்டுவதற்காக இதை கூறியிருக்கலாம்.
ஆசை ஐயாவினால் சிவபுராணம் பாடப்படும் பொழுது நாங்கள் ஆசைஐயாவிற்கும் துரையப்பா அப்பாவிற்கும் பின்பக்கமாக ஆசிரமத்தின் வடக்குப் பகுதியில் அப்புவிற்கு முன்பாக அமர்ந்திருப்போம். திருவும் நானும் துரையப்பா அப்பாவின் முதுகில் தட்டி அவரைக் கூச வைப்போம். ஒரு நாள் அப்பு எங்கள் இருவரையும் மாலை வழிபாட்டிற்குப் பின் அனைத்து அடியார்களும் சென்ற பின் நிற்க வைத்து கடுமையான சில ஞான வார்த்தைகளை வெளிப்படுத்தி எங்களை நன்றாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.






