அற்புதங்கள்

கதிர்காமம்


சிவமயம்

4. அற்புதங்கள்

அப்புவுடைய மறைவான தெய்வீக சக்திகளால் நடந்த அற்புதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அப்புவுடைய மறைவான தெய்வீக சக்தி அற்புதங்கள் சில பின்வருமாறு:

1.H.R.H Queen Elizabeth II இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் திரு. துரைசுவாமி என்பவரை லண்டனில் தனது முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்த பொழுது, திரு.துரைசுவாமி லண்டன் செல்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். அந்நேரத்தில் அவர் நோய்வாய்ப்பட்டார். அவருடைய மருத்துவர் அவரை நல்ல ஓய்வு எடுக்கும்படி கூறியதோடு லண்டன் பயணத்தை நிறுத்தும்படியும் அறிவுறுத்தினார். இந்த வேளையில் அப்பு மலை நாட்டிலுள்ள பேராதனை (Peradeniya) இல் சோமசுந்தரப் புலவரின் சகோதரர் வேலுப்பிள்ளை என்பவருடன் சில காலம் தங்கியிருந்தார். அங்கிருந்த அப்புவால் இங்குள்ள திரு.துரைசுவாமி நோய்வாய்ப்பட்டிருப்பதை உணரக்கூடியதாக இருந்துள்ளது, அவர் வேலுப்பிள்ளையைக் கொண்டு ஆயுர்வேத மருத்துவத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்க வைத்தார். வேலுப்பிள்ளை இம்மருந்துப் பொருட்களை வாங்கும் பொழுது மருந்துக்கடைக்காரர் இப்பொருட்கள் மிகவும் நச்சுத்தன்மையுடையவை என்று தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். வேலுப்பிள்ளை அப்புவிடம் கடை வைத்திருப்பவர் இப்பொருட்கள் “நச்சுத்தன்மையுடையன” என்று கூறியதை கூறும் பொழுது, அப்பு அதைப் புறக்கணித்துவிட்டு, அவை அனைத்தையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கச் சொன்னார். பின் அதை வடிகட்டி வந்த குடிநீரை அப்பு குடித்துள்ளார். அதன் பின்னர் அப்புவுக்கு பயங்கரமான வாந்தியும் கடுமையான வயிற்றுப் போக்கும் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த வேலுப்பிள்ளைக்கு மிகவும் கவலையாக இருந்துள்ளது. இதன் பிறகு அப்பு பிளேன் சோடாவும் எலும்பிச்சம்பழச் சாறும் தரும்படி கேட்டுக் கொண்டார். சில மணி நேரங்களின் பின், அப்பு பழையபடி இயல்பு நிலைக்குத் திரும்பினார். மறுநாள் காலை அப்பு எழும்பியதும் “துரைசுவாமி இனி லண்டனுக்கு போகலாம், அவருடைய வைத்தியம் முடிந்து விட்டது” என்று கூறியுள்ளார். திரு.துரைசுவாமி லண்டனுக்குச் சென்றார், இதனால் துரைசுவாமியும் தமிழ் சமுதாயமும் பலன் அடைவார்கள் என்று கூறினார். லண்டனில் துரைசுவாமி மகாராணியால் Sir பட்டத்தை பெற்று Sir வைத்திலிங்கம் துரைசுவாமியாக பெயரிடப் பட்டார். இச் சம்பவத்தை திருவேலுப்பிள்ளை அவர்கள் அப்பு மகாசமாதி அடைந்த பங்குனி 1964க்குப் பின்னர் வெளிப்படுத்தினார். இது ஒரு குறிப்பிடத்தக்க அப்புவுடைய தனித்துவமான அமைதியான பண்பு. அதேவேளையில் மற்றவர்கள் என்றால் இதை விளம்பரப்படுத்தி உலகத்திற்கு தெரியப்படுத்துவதில் ஈடுபடுவார்கள்.

2. பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அப்புவைப் பார்க்க 20 தடவைகளுக்கு மேல் கொழும்புத்துறை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். 1950ஆம் ஆண்டு அவர் அப்புவை முதலில் சந்தித்தார். அவரது இலங்கைப் பயணங்கள் எப்பொழுதும் கற்றறிந்த கல்வியாளர்கள் மற்றும் பிறருடன் விரிவுரைகள், விளக்கக்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் பற்றியதாக அமைந்திருந்தது. யாழ்பாணத்தில் விரிவுரைகள் ஆற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விரிவுரை முடிந்த பின்னர் அப்புவைப் பார்க்கச் செல்வார். ஆரம்பத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தனுக்கு அப்பு திருமந்திரம், திருவாசகம் மற்றும் திருவிசைப்பா ஆகியவற்றின் சில பகுதிகளை மட்டும் பாடுகிறார் என்று புரியவில்லை. அப்பு பகுதி பகுதியாக பாடிக்கொண்டிருந்த பாடல்களில் இருந்து அவர் அவர்களின் மனத்தில் இருந்த கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது என்பதை அப்புவின் பக்தர்களிடமிருந்து அறிந்து கொண்டார். அங்கு வந்து கலந்து கொண்ட அனைவரும் தங்கள் மனதில் ஆழ்ந்த அமைதியை உணர்ந்தார்கள். அப்பொழுது அரசாங்க அதிபராக இருந்த திரு.ஸ்ரீகாந்தா பேராசிரியர் ஞானசம்பந்தனுடைய யாழ்ப்பாண வருகைகளுக்கு ஒழுங்குகள் செய்தார். திரு.திருமதி. ஸ்ரீகாந்தா கதிர்காமத்தில் நடைபெறும் ஆடிவேல் திருவிழாவிற்குத் தவறாமல் போவார்கள். அப்புவும் தவறாமல்; ஆடிவேல் திருவிழாவில் கலந்து கொள்வார். ஒரு முறை திரு.ஸ்ரீகாந்தா வேலை காரணமாக கதிர்காமத்தில் நடைபெறும் ஆடிவேல் திருவிழாவிற்குப் போக முடியாமல் போய்விட்டது. அதே நேரத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தனும் அவருடன் இருந்தார். மேலும் அப்பு கதிர்காமத்தில் நடைபெறும் ஆடிவேல் திருவிழாவிற்கு சென்றிருப்பார் என்று கருதிக் கொழும்புத்துறை ஆசிரமத்திற்கு செல்ல முடிவுசெய்தனர். அவர்கள் அங்கு சென்ற பொழுது அப்பு அங்கிருந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பு அவர்களை உரிய இடங்களில் அமரச் சொன்னார்.

அப்பு திரு.ஸ்ரீகாந்தாவிடம் அவருடைய வழக்கமான கதிர்காம பயணத்தைப் பற்றி விசாரித்தார். திரு.ஸ்ரீகாந்தா தனக்கு இருக்கும் பிரச்சினைகளைப்பற்றி மனங்கலங்கி உணர்ச்சிபூர்வமாக அப்புவிற்கு விளக்கினார். அப்பு அவருக்கு “கவலைப்படாதே. எங்களிடம் வாகனம் இருக்கிறதா? அந்த முட்டாளுக்குத் தான் மயில் உண்டு. தேவைப்பட்டால் அவன் இங்கு வரலாம். நாங்கள் எங்கே போகலாம் ?” என்று கூறியதோடு அவர் சிரித்த படி அவருடைய வழமையான பாடல்களைப் பாடினார்.

ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் இருவரும் வீடு திரும்பினார்கள். அன்று அப்புவை போய் சந்தித்தது கதிர்காமத்தில் நடந்த ஆடிவேல் திருவிழாவிற்குச் சென்றது போல் உள்ளதாக திரு.ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.

இரண்டு நாட்களின் பின்னர் பேராசிரியர் ஞானசம்பந்தன் கொழும்பில் Sir கந்தையா வைத்தியநாதன் தலைமை தாங்கிய கருத்தரங்கத்தில் 5 நாட்கள் விரிவுரைகள் ஆற்றச் சென்றார். கருத்தரங்கு அமைப்புச் செயலாளருடன் மதிய உணவு உண்பதற்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் அழைக்கப்பட்டார். மதிய உணவு பரிமாறுவதற்கு முதல் கதிர்காமத்தில் நடைபெற்ற ஆடிவேல் திருவிழாவின் ஒளிப்பதிவை ஏற்பாட்டாளர் இயக்கினார். அந்தப் பதிவில் அப்புவைப் பார்த்த பேராசிரியர் ஞானசம்பந்தன் அதே நேரத்தில் கொழும்புத்துறை ஆசிரமத்தில் தான் அவருடன் இருந்ததை நினைத்துத் திகைத்துப் போனார். அவர் திரும்பத் திரும்ப ஒளிப்பதிவு செய்த நேரத்தையும் திகதியையும் மறுபரிசீலனை செய்த பின்பு பேராசிரியர் ஞானசம்பந்தன் அறைக்கு வெளியில் சென்று திரு.ஸ்ரீகாந்தாவை தொலைபேசியில் அழைத்து ஒளிப்பதிவில் தான் அப்புவைக் கதிர்காமத்தில் பார்த்ததைக் கூறியுள்ளார். திரு.ஸ்ரீகாந்தாவால் அவர் கூறியதை நம்பமுடியவில்லை, அந்த ஒளிப்பதிவில் தவறு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பேராசிரியர் ஞானசம்பந்தன் சென்னை திரும்பும் பயணத்தை மாற்றிக் கொண்டு கருத்தரங்குகளுக்குப் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல முடிவு செய்தார்.

அவருடைய கூட்டத்திலிருந்த அனைவரும் ஆடிவேல் திருவிழாவிற்காக கதிர்காமத்திற்குச் சென்றுள்ளார்கள். அவர்களால் பேராசிரியர் ஞானசம்பந்தனுடைய கதையை நம்பமுடியவில்லை. பேராசிரியர் ஞானசம்பந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவரைக் கூட்டி வருவதற்காக திரு.ஸ்ரீகாந்தா சாரதியை அனுப்பாமல் தானே காரைச் செலுத்திச் சென்றுள்ளார். கதிர்காமத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்பதிவை உண்மையென்று நம்பாததால் தான் இதைப் பற்றி விவாதிப்பதற்காக திரு.ஸ்ரீகாந்தா தானே விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அதே நாள் மாலை பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் திரு.திருமதி ஸ்ரீகாந்தா மூவரும் கொழும்புத்துறை ஆசிரமத்திற்குச் சென்றார்கள். அப்பு பேராசிரியர் ஞானசம்பந்தனிடம் அவருடைய பயணத்தை மாற்றியமைத்ததற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கான காரணங்களை பேராசிரியர் ஞானசம்பந்தன் விளக்கிய பொழுது அப்பு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார். சில நாட்களுக்கு முன்பு அவர்கள் அவரைச் சந்தித்த போது அவர் சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் கூறியுள்ளார். “அந்த முட்டாள் தான் மயில் வைத்திருக்கிறான். நாங்கள் எப்படி போகமுடியும். எங்களிடம் மயில் இருக்கின்றதா?” இதிலிருந்து பேராசிரியர் ஞானசம்பந்தன் அப்பு போன்ற “உணர்ந்த ஆன்மா” ஒரே நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பல இடங்களில் இருக்க முடியும் என்பதைக் கற்றுக்கொண்டுள்ளார்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் ஒருவிதமாக தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு அப்புவிடம் “சுவாமி நீங்கள் கதிர்காமத்தில் இருந்தது உண்மைதானா?” என்று சொல்லத் தொடங்கியதும் அப்பு உரத்த குரலில் பேராசிரியர் ஞானசம்பந்தனை வாயை மூடிக் கொள்ளும்படி கட்டளையிட்டுள்ளார். இதன் பிறகு அப்பு வழமை போல அன்பான வார்த்தைகளுடன் அவர்களுடன் உரையாடியுள்ளார். அப்புவின் தெய்வீக நிலையைப் பற்றிய பேராசிரியர் ஞானசம்பந்தனின் நினைவுகளில் இதுவும் ஒன்று.

3. 1955 இல் பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன் யாழ்பாணத்திற்கு அண்மையில் உள்ள கரணவாயில் பேச்சு/ விரிவுரைகள் நிகழ்த்த அழைக்கப்பட்டார். இவரை அழைத்தது மலேசியாவில் ஓய்வூதியதாரான முருகப்பு என்பவர். பேராசிரியர். ஞானசம்பந்தன் தனது விரிவுரைகளுக்குப் பின்னர் எப்பொழுதும் அப்புவைச் சந்திப்பார்.

முதல் விரிவுரைக்குப் பின்னர், அவர் அப்புவைத் தரிசித்துவிட்டு இரவு நேரத்தில் முருகப்புவின் இல்லத்திற்கு திரும்பியுள்ளார். காலையில் முருகப்பு அவரிடம் “நீங்கள் நன்றாகத் தூங்கினீர்களா?” என்று கேட்ட பொழுது பேராசிரியரால் ஒரு வார்த்தை கூட பதிலளிக்க முடியவில்லை. அவருடைய வாயிலிருந்து காற்று மட்டுமே வந்தது. அவர் பல முறை முயற்சி செய்து பார்த்தும் எந்தப் பயனுமில்லை. அவர் தனது இந்தப் பேசமுடியாத காரணத்தால் அதிர்ச்சியடைந்து சாவகச்சேரியிலிருந்த ஓய்வுபெற்ற ENT வைத்தியரிடம் சென்றுள்ளார். அவரது தொண்டையைப் பரிசோதித்த மருத்துவர் பேராசிரியருக்கு “குரல் நாண்கள் முடக்கம்” (Paralysis of the vocal cord) அடைந்திருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் இவரை சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளார்.
.
பேராசிரியருக்குத் தனது பல்வேறு விரிவுரைகளை நிகழ்த்துவதில் தான் பேராசிரியராக இருந்த தனது ஒரே வருமானம் தரும் உத்தியோகம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதும், தான் இனி உயிர் பிழைப்பதற்குப் பெரிய சவால்களை எதிர் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்து திகைத்தும், அதிர்ச்சியும், பயமும் அடைந்தார். அவர் தனது கார் இருந்த இடத்திற்கு வந்து அதில் ஏறி காரில் புறப்பட்ட பொழுது அந்த வைத்தியர் காரின் முன் கதவுக்கு அருகில் வந்து யோகசுவாமிகளை (அப்பு) ஒரு அடியவராகப் போய் பார்க்கும் படி போராசிரியரை பரிந்து கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் பகல் நேரங்களில் அப்புவைச் சந்தித்ததில்லை. வைத்தியர் பரிந்துரைக்கும் வரை இந்த எண்ணம் அவரது மனதில் தோன்றவில்லை.

பேராசிரியர் வழக்கமாக எப்பொழுதும் மாலை 6.00 மணிக்குப் பிறகு தான் அப்புவைச் சென்று பார்ப்பார். அன்றைய தினம் அவர் சாவகச்சேரியிலிருந்து கொழும்புத்துறைக்குச் சென்று அப்புவைச் சந்தித்தார். அங்கு அவர் அப்புவைப் பார்த்ததும் தரையில் விழுந்து அழத்தொடங்கிவிட்டார். சில நிமிடங்களுக்குப் பின்னர் அப்பு அவரிடம் “அந்த மருத்துவர், முருகன் என்று நினைத்தீர்களா?” என்று கேட்டார். மேலும் ஆசிரமத்தில் வழக்கமான இடத்தில் எழுந்து தனக்குப் பக்கத்தில் உட்காருமாறு கூறினார். சுமார் அரை மணி நேரம் ஆலோசனை, அறிவுரைகளின் பின், அப்பு அவரிடம் “சின்னப் பயலே போய் உமது மாலை விரிவுரையை வழங்கிவிட்டு திரும்பி வாரும்” என்று கூறினார். உடனே பேராசிரியர் எழுந்து “நீங்கள் கூறியபடி நான் செய்கிறேன்” என்று பதிலளித்தார். இந்த வார்த்தைகள் தான் பேராசிரியரின் வாயிலிருந்து வெளி வந்த முதல் வார்த்தைகள்.

பேராசிரியர் அப்புவின் முன்னால் தனது இருப்பைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் நின்ற போது, திடீரென்று அப்பு கூறினார் “சின்னப் பயலே எங்களால் மட்டுமே சேக்கிழாரையும் கந்தனையும் வெட்டிப் புதைக்க முடியும், பின் பயமின்றி உனது வேலையை தொடர்ந்து கைக்கொள்.”

பேராசிரியர் ஆசிரமத்திலிருந்து புறப்பட்டதும் தன்னை கொழும்புத்துறை ஆசிரமத்திற்குப் போகுமாறு பரிந்துரைத்த அந்த மருத்துவரை மீண்டும் சந்திக்க சாவகச்சேரிக்கு தனது காரை ஓட்டிச்சென்றார்.

பேராசிரியர் சாவகச்சேரியை அடைந்ததும் வீதியில் இருந்தே வைத்தியரை “டாக்டர்” என உரக்க அழைத்தார். வைத்தியர் தனது வீட்டைவிட்டு வெளியில் வந்து பேராசிரியரைக் கண்டதும் தனது கைகளைக் கூப்பிப் பிரார்த்தனை செய்தார்.

இதைப்பார்த்த பேராசிரியருக்கு ஒரு வயதான பெரிய மனிதர் இப்படி நடந்து கொள்வதை எதிர்பார்க்கவில்லை. அவர் அந்த வைத்தியரிடம் இதற்கான காரணத்தை விசாரித்தார். வைத்தியர் பேராசிரியருடைய இரண்டு கைகளையும் பிடித்து அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மதுரைக்குப் போவதற்கான இரண்டு விமானச் சீட்டுக்களை அந்த வீட்டிலுள்ள வைத்தியரின் உதவியாளரால் பேராசிரியருக்கு வழங்கப்பட்டது. அதில் ஒன்று பேராசிரியருக்கும் மற்றொன்று அந்த உதவியாளருக்கும். பின்னர் வைத்தியர் பேராசிரியருக்கு வந்துள்ள நோயானது நூறாயிரத்தில் ஒருவருக்குத் தான் வரக்கூடியதும் இதற்கு எந்த வித சிகிச்சையும் இல்லையென்றும் விளக்கினார். அத்துடன் பேராசிரியரால் ஒருவரோடும் தொடர்பு கொள்ளமுடியாததால்,

வைத்தியர் தனது உதவியாளரைப் பயணத்தின் போது அவருக்கு உதவி செய்ய அவருடன் மதுரைக்கு செல்ல ஏற்பாடுகளும் செய்துள்ளார்.

வைத்தியர் தனது 40 ஆண்டுகள் ENT அனுபவத்தில் இந்த நோய்க்கு மருத்துவத்தில் எந்த ஒரு சிகிச்சையும் இல்லை மற்றும் தெய்வீக அருளால் மட்டுமே இந்நோயைக் குணப்படுத்த முடியும் என்ற முடிவிற்கு வந்ததாக ஒப்புக்கொண்டார்.

பகல் நேரங்களில் ஒருவரும் அப்புவை வந்து சந்திப்பதில்லை. எனவே பேராசிரியர்.S.ஞானசம்பந்தனைக் கொழும்புத்துறையிலுள்ள அவரது ஆசிரமத்திற்கு அனுப்பி வைப்பதற்கு அப்பு தான் வைத்தியரைக் கொண்டு சொல்ல வைத்துள்ளார்.

பேராசிரியர் அவருடைய விரிவுரைக்குப் பின்னர் அப்பு கூறியதைப் போல் ஆசிரமத்திற்கு வந்தார்.

இந்த காலகட்டத்தில் பேராசிரியர்.ஞானசம்பந்தன் கம்பராமாயணம் பற்றி 30 கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருந்தார். 1997இல் ஞானசம்பந்தன் “சேக்கிழார் தந்த செல்வம்” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். பேராசிரியர் ஞானசம்பந்தன் தனது அனைத்து எழுத்துகளும் வெளியீடுகளும் அப்புவால் இயக்கப்படுகின்றன என்பதை நம்பினார். தனது 80ஆவது பிறந்த நாளைக் கடந்த பிறகும் கூட அவரது குரல் மாறவில்லை, மேலும் அவர் தொடர்ந்தும் நலமிக்க சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பேராசிரியர் ஞானசம்பந்தன் ஏதேனும் “குரல்வளம் நன்றாவதற்கான பயிற்சிகளுக்கு” உட்பட்டிருக்கிறாரா? என்று மக்கள் விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு அவர் அளித்த பதில் “1916இல் நான் பிறந்த போது இருந்த குரல் 1955இல் யோகசுவாமிகளின் (அப்பு) தெய்வீக கருணையால் மீட்கப்பட்டு என்னுடன் சேர்க்கப்பட்டது.’