யோகசுவாமிகள் 29-05-1872இல் மாவிட்டபுரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் கொழும்புத்துறையைச் சேர்ந்த அம்பலவாணர். அவருடைய தாயார் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சின்னாட்சி பிள்ளை. கிடைக்கப் பெற்ற தகவல்களிலிருந்து பிறந்தவுடன் அவருக்கு வைக்கபட்ட பெயர் “சதாசிவம்” என்றும் “யோகநாதன்” என்றும் வெளிப்படுத்துகின்றன.

யோகசுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்கள், போதனைகளின் அடிப்படையிலிருந்து எங்களால் அவருக்கு மிகவும் பிடித்த பெயர் யோகநாதன் என்பதை உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது. யோகநாதனின் தந்தையார் மஸ்கெலியாவில் (மலை நாடு) ஒரு வணிகராக இருந்தார். யோகநாதனின் தாயார் அவருடைய மிகச் சிறு வயதிலேயே (10 வயது அடைவதற்கு முன்பாக) காலமாகிவிட்டார்.
யோகநாதன் அவருடைய தந்தையாரின் சகோதரி முத்துப்பிள்ளை என்பவரால் கச்சேரியில் வளர்க்கப்பட்டார். ஒரு முறை யோகநாதன், தன் சிறு வயதில் மிஞ்சிய சாதத்தை எறிந்ததற்காக தனது தாயார் தன்னை “ஒரு பிச்சைக்காரனாகத்தான் வாழ்வாய்” என்று கூறியதை நினைவுறுத்துவார்.
யோகநாதன் இந்த சம்பவத்தை மிகப்பெருமையுடன் திரும்பத் திரும்ப கூறுவதோடு ஒளவையாரின் ஞான வார்த்தைகளாகிய “தாய் சொல்லைத் தட்டாதே” என்னும் வாக்கியத்தை விளக்குவதற்கு இதை உபயோகிப்பார். தாயார் கூறியதைப் போல் எப்பொழுதும் “நான் பிச்சைக்காரனைப் போல் வாழ்ந்தேன்” என்று பெருமையுடன் கூறுவார்.
யோகநாதன் தனது ஆரம்பக் கல்வியை கொழும்புத்துறையில் கிறிஸ்தவப் பாடசாலையில் கற்றார். இது கொழும்புத்துறையில் சுவாமியார் வீதியின் முடிவில் உள்ள கடற்கரை வீதியில் அமைந்துள்ளது.
யோகநாதனின் தந்தை அம்பலவாணர் இறந்த பின், அவருடைய கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த சகோதரரின் உதவியுடன் யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியில் (St. Patrick’s College) சேர்க்கப்பட்டார். அக்காலத்தில் கிறிஸ்தவப் பாடசாலைகளின் மாணவர்கள் கிறிஸ்தவப் பெயர் எடுப்பது நியதியாக இருந்தது. இதன் பொருட்டு யோகநாதனுக்கு “ஜோன்” என்ற பெயர் அப் பாடசாலையால் வைக்கப்பட்டது.
யோகநாதனின் தந்தை இறப்பதற்கு முன் அவரை மஸ்கெலியா அழைத்துப்போய் வணிகத் தொழில் கற்பித்தார். ஆனால், யோகநாதனுக்குத் தனது தந்தையின் வணிகத் தொழிலை கற்க நாட்டம் இருக்கவில்லை.
யோகநாதன் கொழும்புத்துறைக்குத் திரும்பி வந்து 1890 இல் கிளிநொச்சி இரணைமடு நீர்ப் பாசனத்தில் அலுவலகப் பண்டகக் காப்பாளராகப் பதவி ஏற்றார். யோகநாதன் மஸ்கெலியாவில் இருந்த ஆரம்ப காலம் தொட்டு தனது ஆன்மீக வாழ்க்கையைத் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். அவர் ஔவையாருடைய கவிதைகள், திருமுறை, தேவாரங்கள், உபநிடதங்கள், சமய நூல்கள், சமய இலக்கியங்கள் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்தவராக இருந்தார்.
யோகநாதன் தமிழ், ஆங்கில, சமய நூல்களை வாசிப்பதில் பல மணி நேரங்களைச் செலவிட்டார். அவர் தனது முழுமாத ஊதியத்தையும் புத்தகங்கள் வாங்குவதிலும் தேவையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவி செய்வதிலேயே செலவழித்தார் .
இக் கால கட்டத்தில் (1890 பின்) கொழும்புத்துறையில் குடியிருப்பவர்கள் குறிப்பாக, விதானையார் திரு.திருஞானசம்பந்தரும் திரு.துரையப்பாவும் தினமும் செல்லப்பா சுவாமியை தரிசிக்க நல்லூர்க்குப் போவார்கள். தரிசிக்கச் செல்பவர்களில் அனேகமானோர் கொழும்புத்துறையை இருக்கையாகக் கொண்டவர்கள். ஆதலால், செல்லப்பா சுவாமிகளை கொழும்புத்துறை மக்களின் சுவாமியென்றும் சிலரால் அழைக்கப்பட்டார்.

யோகநாதன் 25-01-1897 இல் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவைக் கேட்ட பின்னர் யோகநாதனின் ஆன்மீகத்தேடல் அதிகரித்து ஆத்மீக ஆன்ம கவர்ச்சி மனதில் கடூரமாக உண்டாகி கொழும்புத்துறையிலிருந்து செல்லும் அடியார்கள் கூட்டத்துடன் தானும் சேர்ந்து நல்லூருக்கு செல்லப்பா சுவாமிகளைப் பார்க்கச் செல்வார்.
யோகநாதன் அடிக்கடி சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவின் தொடக்கத்தை “நேரமோ குறைவு, பொருளோ பரந்தது” என்பதைத் தனது தொண்டர்களுக்கு ஞாபகப்படுத்துவார். யோகநாதன் செல்லப்பா சுவாமிகளை முதல் முறையாகப் பார்த்து வணங்கிய பொழுது, செல்லப்பா சுவாமிகள் அவரை “நீ யாரடா” என்று சத்தமாக அதட்டி மிரட்டினார்.

யோகநாதன் செல்லப்பா சுவாமியின் முதல் சந்திப்பில் தான் உணர்ந்ததை பின்வரும் நற்சிந்தனைப்பாடலின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்
“ஆசானைக் கண்டேன்”
“ஆசானைக் கண்டேன் அருந்தவர் வாழ் நல்லூரில்
பேசாதனவெல்லாம் பேசினான் – கூசாமல் நின்றேன்
நீ யாரடாவென்றே அதட்டினான்
அன்றேயான் பெற்றேனருள் “
கிளிநொச்சியிலுள்ள யோகநாதன் உத்தியோகம் பார்த்த இடம், நல்லூரில் உள்ள செல்லப்பா சுவாமிகள் இருந்த இடத்திற்கு 45 மைல்கள் தொலைவில் உள்ளது. யோகநாதன் உத்தியோகம் செய்யாத நேரங்களில் நல்லூர் தேரடியில் இருக்கும் செல்லப்பா சுவாமிகளைச் சென்று பார்ப்பார். அவர் கிளிநொச்சியிலிருந்து 45 மைல்கள் நடந்து தான் செல்லப்பா சுவாமிகளிடம் செல்வார்.
முதல் சந்திப்பில் செல்லப்பா சுவாமிகளால் சொல்லப்பட்ட வார்த்தைகள் யோகநாதனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. யோகநாதன் தனக்கும் செல்லப்பாசுவாமிகளுக்கும் உள்ள தொடர்பு புதியதல்ல, அது எப்போதும் இருந்தது என்பதை உணர்ந்தார். புத்துணர்வு அவர் கிளிநொச்சியில் படித்த புத்தகங்களில் இருந்து அதன் விளக்கத்தை எளிதாக விளங்கிக் கொள்ள உதவியாக இருந்தது. இந்தப் புதிய உணர்வும் செல்லப்பாசுவாமிகளைப் பார்க்க வேண்டும் என்ற தாகமும் அவருக்குள் வேகமாக வளர ஆரம்பித்தது.
செல்லப்பாசுவாமி யோகநாதனை ஆரம்பத்தில் புறக்கணித்தார். யோகநாதனின் முதல் சந்திப்புகளில் அவர் பல்வேறு கஷ்டங்களுக்குட்படுத்தப்பட்டார். யோகநாதன் நிராகரிக்கப்பட்டார், கண்டிக்கப்பட்டார். பின் மீண்டும் செல்லப்பாசுவாமிகளால் புது உணர்வு கொடுக்கப்பட்டார்.





