யோகநாதன் செல்லப்பாசுவாமிகளின் வழிகாட்டலில் பல்வேறு புரிந்துணர்வு செயல்முறைகளுக்குள் உட்படுத்தப்பட்டார். அவற்றுள் சுடும் வெய்யிலிலும் இருண்ட இரவுகளிலும் பல நாட்கள் சும்மா நிற்றல் போன்றவையும் அடங்கும்.
செல்லப்பாசுவாமிகளின் கடுமையான பேச்சு அமர்வுகளில் அவரிடம் இருந்து வெளிப்படுத்தபடும் சில வெகு மதிப்புள்ள மறைமுகமான கருத்துக்களைக் கொண்ட வாசகங்களை யோகநாதன் துல்லியமாக அவதானிப்பார்.
அவர் ஒரு முறை கூறினார் “செல்லப்பாசுவாமிகள் ஒரு மகான்”. அவர் எந்த ஒரு மாயைக்கும் அடிபணிந்ததில்லை. அவர் கூறியது எல்லாம் “நாம் அறியோம்” “எப்பவோ முடிந்த காரியம்” என்பதாகும்.
சிலநேரங்களில் செல்லப்பாசுவாமிகள் தன் கால்களில் விழும் அடியவர்களை பயமுறுத்தும் காரணமாக தன்னை அணுகாமல் இருக்கும் பொருட்டு அவர் நல்லூர்க் கோவிலின் வெளிப்புற முற்றங்களில் உள்ள அசுத்தமான இடங்களில் போய் அமர்வார்.
ஒரு கேள்விக்கான பதிலை அவரிடம் இருந்து யாரும் பெற்றதாக நான் நினைக்கவில்லை என்றார். “செல்லப்பாசுவாமிகளின் பைத்தியக்காரத் தனமான பேச்சுகளில் இடைக்கிடையே வருகின்ற விலைமதிக்க முடியாத, மிக உயர்வான பொருள் தருகின்ற கருத்துக்களை, சொற்களை கேட்க மெளனமாக அவர் பின்னே நின்றேன்.”
காலப்போக்கில் யோகநாதன் ஆன்மீக வளர்ச்சி பெற்றபோது செல்லப்பா சுவாமிகளால் நான்கு மகா வாக்கியங்கள் ஓதி ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
- ஒரு பொல்லாப்பும் இல்லை
- எப்பவோ முடிந்த காரியம்.
- நாம் அறியோம்.
- முழுவதும் உண்மை.
இந்த அற்புததினமன்று இரண்டாம் பங்குனித் திங்கள். இந் நாளை யோகசுவாமிகள் பிரபலமான திருவடிப் பூசையாகத் தொடர்ந்து அனுஷ்டிப்பார். யோகசுவாமிகள் செல்லப்பாசுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேரடியில் 40 நாட்கள் தியானத்தின் பின் கதிர்காமத்தை நோக்கி ஒரு நீண்ட பாதயாத்திரையைத் தொடங்கினார்.
யோகநாதனின் உறவினர்கள் யோகநாதன் எங்கே என்று செல்லப்பாசுவாமிகளிடம் கேட்டபொழுது அவர் “அவன் இறந்து விட்டான்” என்று பதிலளித்தார். (செல்லப்பாசுவாமிகளால் யோகநாதன் மனித பிறப்பிலிருந்து தெய்வீக நிலைக்கு மாற்றப்பட்டார்.)
யோகநாதன் முதல்முதலாக 1897ஆம் ஆண்டு செல்லப்பாசுவாமிகளைச் சந்தித்த பின், செல்லப்பா சுவாமிகள் யோகசுவாமிகளுக்குப் பலவிதமான கடூரமான வாழ்க்கை சோதனைகள், இடுக்கண்கள், கஷ்டங்கள் ஊடாக தனிப்பட்ட ஆன்மீக வழிகாட்டி யோகநாதனுக்கு 1910ஆம் ஆண்டு காலகட்டத்தில் தீட்சை வைத்த பின், கால்நடையாக கதிர்காம யாத்திரைக்கு அனுப்பி வைத்தார் என அறியக்கூடியதாக இருக்கின்றது.
யோகசுவாமிகளின் நீண்ட பாதயாத்திரை நல்லூரில் தொடங்கி ஆனையிறவை அடைந்து, அதன் பின் கிழக்குக் கடற்கரை வழியாக மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது கிடைத்த உணவை உட்கொண்டும் பொருத்தமான இடங்களில் நித்திரை செய்தும் பாதயாத்திரையைத் தொடர்ந்தார். அவர் வழியிலுள்ள கோவில்களுக்கும் சென்று தங்கினார்.
யோகசுவாமிகள் இஸ்லாமிய ஆன்மீக வாதிகளையும் சந்தித்தார். அவர்கள் அவரை மரியாதையுடன் நடத்தினார்கள். மற்றும் அவருக்கு அவர்கள் ஒரு அச்சரக்கூட்டை நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காக கொடுத்தார்கள். ஆனால் அவர் அந்த அச்சரக்கூட்டை தன்னுடன் எடுத்து செல்லாமல் தனது பாதயாத்திரையை அடர்ந்த காடுகளில் காட்டு எருமைகள் உலாவும் இடங்களுடாக அவற்றின் எந்தவித தாக்குதல்களும் இல்லாமல் கடந்து சென்றார்.
யோகசுவாமிகள் ஒரு ஆற்றங்கரையை அடைந்ததும் தனது பாதயாத்திரையை இடை நிறுத்தி ஒரு குழிக்குள் நல்ல உணர்வுநிலையில் சில நாட்கள் தியானத்தில் இருந்தார். வேட்டையாடுபவர்கள் இவரை ஆற்றங்கரையில் கண்டு இவருக்கு நல்ல உணவு சமைத்து கொடுத்து கட்டுமரத்தில் ஆற்றைக் கடந்துகொண்டு போய்விட்டனர். அவர்கள் இவருடைய தெய்வீகத்தன்மையைக் கண்டு இவரை மிகவும் மரியாதையுடன் உபசரித்தார்கள். அவர்கள் இவரை அவர்களது மொழியில் “மதகுரு” என்று அழைத்தார்கள்.

யோகசுவாமிகள் கதிர்காமத்தையடைந்ததும் கோவிலில் தரிசனம் செய்தும் மிகுந்த நேரத்தை மாணிக்க கங்கை ஓரத்தில் இளைப்பாறவும் செய்தார். இரவுகளில் கதிர்காம மலையின் உச்சியில் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியும், பகல் நேரத்தில் மிகுந்த மனஅமைதியும்; சந்தோஷமும் அளிக்கும் வகையில் ஆன்மீக தியானத்தில் அமர்ந்திருந்தார்.
யோகசுவாமிகள் தனது பாதயாத்திரையைத் தொடர்ந்து மேற்குக் கடற்கரை வழியாக நடந்து கொழும்பை அடைந்தார். அவர் கொழும்பில் பல்வேறு இன, மத மார்க்கத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து பாதையோரங்களை தம் இருப்பிடமாக ஏற்று கொண்டார்.
இக் கதிர்காமப் பாதயாத்திரை யோகசுவாமிகளால் கடமையுடனும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் கடைப்பிடிக்கபட்டு அவருக்கு மனம் உணர்ந்த அக அறிவுள்ள ஆன்மீக அனுபவங்களைப் பலப்படுத்தி அடைய வைத்தது. யோகசுவாமிகளால் செல்லப்பாசுவாமிகள் வடமாகாணத்தில் ஆரம்ப காலத்தில் உடல்ரீதியாக கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் அனுபவிக்க கூடியதாக இருந்தது.
அத்துடன் பாதயாத்திரையின் போது தனக்குள் தனது குருவின் இருப்பையும் உணர்ந்து கொண்டார். சில நாட்கள் கொழும்பில் கழித்த பின் யோகசுவாமிகள் மாத்தளையினூடாக யாழ்ப்பாணத்தை அடைந்தார்.
மேற்பார்வையாளர் சரவணமுத்து என்பவர் மாத்தளையில் இருந்த பொழுது அவர் ஒரு தெய்வீகக் கனவு கண்டார். அதில் ஒரு முனிவர் தோன்றி யோகசுவாமிகளுக்கு தேவையானவற்றை செய்யுமாறு கட்டளையிட்டு யோகசுவாமிகளுடைய தோற்றத்தின் சரியான விளக்கத்தையும் காட்டினார்.
அம் மேற்பார்வையாளர் அத் தெய்வீக அறிவுறுத்தலின் படி வீதியோரத்தில் காத்து நின்று யோகசுவாமிகளை அடையாளம் கண்டு அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். யோகசுவாமிகளுக்கு நல்ல கவனிப்பு அளிக்கப்பட்டு நல்ல உணவும் புதிய ஆடைகளும் வழங்கப்பட்டது.
யோகசுவாமிகள் நல்லூர் போவதற்கு தீர்மானித்த பொழுது அவர்கள் பண உதவிசெய்ய முன் வந்தார்கள். யோகசுவாமிகள் ரயில் பயணச்சீட்டுக்குத் தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மிகுதியை அவர்களிடம் திரும்பக் கொடுத்துவிட்டார்.
யோகசுவாமிகள் தனது பாதயாத்திரையைத் திருப்திகரமாக முடித்துக் கொண்டு தனது குரு செல்லப்பா சுவாமிகளிடம் திரும்பினார். 1911ஆம் ஆண்டு செல்லப்பாசுவாமிகள் யோகசுவாமிகளைக் கொழும்புத்துறை சந்தியிலுள்ள இலுப்பை மரத்தடியில் அவருடைய தவம் மற்றும் ஆன்மீக வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துமாறு வழிகாட்டினார். யோகசுவாமிகள் குருவுடைய கட்டளைக்கு அடிபணிந்து அந்த இலுப்பை மரத்தடியில் பல நாட்களாக இருந்தார். வெய்யிலையும் மழையையும் பொருட்படுத்தாது இருந்தார். இரவும் பகலும் விழிப்புடனே இருந்தார். செல்லப்பா சுவாமிகள்; யோகசுவாமிகளைத் தன்னிடமிருந்து குருவை புறம்பாக பார்காத நிலையை அடையும் வரைக்கும் தவறாமல் வந்து சந்தித்து அவரை வழிநடத்தினார்.
யோகசுவாமிகள் “நீ” என்பதும் “நான்” என்பதும் இல்லை என்ற நிலையில் நித்திய பேரின்பத்தை அடைந்தார். இந்த நிலையில் யோகசுவாமிகள் திருப்தியான உண்மையான சந்தோஷத்தை அனுபவித்தார்.
யோகசுவாமிகள் ஆரோக்கியமாகவும் உயிருடனும் இருப்பதைக் கண்ட அவருடைய உறவினர்கள் செல்லப்பாசுவாமிகளை எதிர்கொண்டு, அவர் இருக்கும் நிலையைக் கேட்ட பொழுது திரும்பவும் அதே வார்த்தைகளை கூறினார் “அவன் இறந்துவிட்டான்” அத்துடன் “நாங்கள் பொய் செல்லுவதில்லை” என்றும் கூறினார்.
யோகசுவாமிகள் அந்த இலுப்பை மரநிழலிலேயே தொடர்ந்து 1914 வரை இருந்தார். இந்த கால கட்டத்தில் தன்னிடம் வந்து வணங்கி அவரை பின்பற்றுவோர் எல்லோரையும் துரத்தினார். இதைப் பார்த்த மக்கள் யோகசுவாமிகளின் நடத்தை அவருடைய குரு செல்லப்பாசுவாமிகளின் நடத்தையை மிகவும் ஒத்திருப்பதாகக் கண்டார்கள். மக்கள் செல்லப்பாசுவாமிகளை பைத்தியக்கார செல்லப்பா என்று அழைத்தனர்.

செல்லப்பாசுவாமிகள் இலுப்பை மரத்தடியில் தியானம் செய்துகொண்டு இருக்கும் யோக சுவாமிகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். செல்லப்பாசுவாமிகள்; சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு சிவதொண்டு செய்யுமாறு ஆசீர்வதித்து, தன்னைப் போல் பைத்தியக்காரனாக செயற்பட வேண்டாம் என்றும் கூறினார்.
1915இல் செல்லப்பாசுவாமிகளுடைய ஆரோக்கியம் குன்றத் தொடங்கியதால் அவர் தனது குடிசையில் நோய்வாய்ப்பட்டு இருந்தார். யோகசுவாமிகள் தனது குருவை நல்லூரில் உள்ள அவருடைய குடிசைக்குச் சென்று பார்ப்பதற்காக அவர் படலையை அணுகிய பொழுது, அவருடைய குரு சத்தமாக “யாரடா படலையில்” என்று கத்தி “வெளியில் நின்று பாரடா” என்றும் சொன்னார்.
இந்த வார்த்தைகள் அவர் முதல் தடவை குருவைச் சந்தித்த பொழுது கூறிய வார்த்தைகளை (“யாரடா நீ”) ஒத்திருந்தன. யோகசுவாமிகள் கொழும்புத்துறையிலுள்ள தனது இடத்திற்குத் திரும்பிவிட்டார். யோகசுவாமிகள் அவருடைய குரு செல்லப்பாசுவாமிகளின் ஜோதிப்பிரகாசமான பார்வையில் பிரசன்னமாய் இருந்தார்.
யோகசுவாமிகள் தான் தனது குருவிடம் இருந்து கடைசியாக விடைபெற்றதைக் கீழ் வரும் நற்சிந்தனைப் பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்:






