எங்களது திருமணத்திற்குப் பின்பு சந்தசுவாமிகள் எங்களுக்கு எழுதிய முதல் கடிதம் பின்வருமாறு:
கைதடி
22-08-1981
அன்புள்ள சிலயோக மற்றும் யோகி
“யோகா” வினது அர்த்தம் ஒன்றிப்பு அதுபோல் நீங்கள் இருவரும் ஒன்று தான். அதனால் உங்கள் இருவரது இரண்டு கடிதங்களுக்கு நான் ஒரு பதில் கடிதம் எழுதுகிறேன். உங்களுடைய கடிதங்கள் கிடைத்ததற்கு நான் மிக்க மகிழ்ச்சி யடைந்தேன். (எதிலும் ஒன்றிற்கு மட்டும் விலையைச் செலுத்திலிட்டு இரண்டைப் பெறுவது ஒரு மிகச்சிறந்த தொழில் யுக்தி)
உங்கள் இருவருக்கும் எல்லாம் நன்றாகப் போகின்றன (ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றாலும்) என்பதைக் கேள்விப்படுவதிலும் குறிப்பாக சிவயோகி புதிய பழக்கமற்ற சூழ்நிலைகளில் மிகவிரைவாகவும் எளிதாகவும் வாழப் பழகிவிட்டார் என்பதை அறியவும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்கு இங்கிருந்து அதிக செய்திகள் இல்லை மார்க்கண்டு சுவாமிகள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது இருந்ததை விடஇப்பொழுது அவர் பலமாக இருக்கிறார் என்பது எனது எண்ணம்
நீங்கள் இங்கிருந்து சென்று ஒன்று அல்லது இரண்டு வாரங்களின் பின்னர் நான் காது வைத்தியரைப் போய்ப் பார்த்தேன். மற்றும் அவர் அதில் தொற்று இருப்பதாகச் சொன்னார். நான் இங்கிலாந்தைவிட்டு வெளியேறும் போது இருந்தமாதிரி திரும்பவு ம் எனக்கு கேட்கத் தொடங்கிட்டது. என்னன அவரிடம் கூட்டிச் சென்றதற்கு நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன், அவருடைய பெயர் சோமபால் அல்ல சந்திரபால் அவருடைய பெயர் முதல் எழுத்து ‘V” என்று நான் நினைக்கிறேன். அவருடைய முகவரி ‘சுகிஸ்தான், அச்சுவேலி, N.P
உங்கள் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்.
எல்லாம் சரி
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
1981ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து எதிர்கொள்ளும் சவால்கள், பொறுப்புக்கள் காரணமாக நான் எனது உடலை (மற்ற பெண்ணை) பராமரித்துக் கொள்ளவில்லை. மேலும் 1982ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிலவாரங்களாக “சிங்கிள்ஸ்” (Shingles) நோயால் பாதிக்கப்பட்டேன். நான் இந் நோயைப் பற்றி சந்தசுவாமிகளுக்கு விளக்கி எழுதியதற்கு அவர் எனக்கு எழுதிய பதில் கடிதம் பின்வருமாறு:
கைதடி
30-09-1982
எனது அன்புள்ள யோகிகள்,
உங்களுடைய கடிதங்களுக்கும், அதில் எழுதப்பட்ட நல்ல செய்திகளுக்கும் மிக்க நன்றி. நீங்கள் இருவரும் “மகா வாக்கியங்கள்” “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்பதன் முழு அர்த்தத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டீர்கள் என்பது தான் எனது மனதில் பட்ட முக்கிய செய்தி – உண்மையில் கோட்பாட்டளவில் இல்லை எனக்கு அதைச் செய்வதற்கும் அதை நடைமுறையில் பயன்படுத்தத் தொடங்குவதற்கும் சரியாக 30 வருடங்கள் எழுத்தன. உண்மையான மகிழ்ச்சியின் இரகசியம் அதில் அடங்கியுள்ளது.
சுவாமி கூறியுள்ளார். “மக்கள் ஒரு நல்ல பலனை அடைவதற்காக முதலில் கஷ்டப்படுவார்கள்” என்று. கஷ்டங்களுடைய அர்த்தம் என்பது “நீங்கள் ஒரு நன்மையைப் பெறும் பொருட்டு சோதிக்கப்படுகிறீர்கள்” மற்றும் தான் நீங்கள் சமீபத்தில் செய்த நல்ல செயல்திறன் மூலம் வர இருக்கும் ஆசிர்வாதம் என்று நான் நினைக்கின்றேன். நீங்கள் உங்கள் இரு பெண்களையும் கவனிக்க வேண்டும் என்பதற்கான இது ஒரு நினைவூட்டல் அல்லது ஒரு எச்சரிக்கை. நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்கு “எப்பொழுது எனது உடலில் வலிமை/சக்தி குறைந்த பொழுது எனது உடலில் உள்ள வைரஸ் (Virus) அதனுடைய வேலையை செய்துவிட்டது. ஆனால் நீங்கள் உங்களுடைய உடலின் வலிமை/சக்தி யைக் குறையவிடக்கூடாது. நான் 17-02-1981 அன்று கண்ட கனவு “நீங்கள் உங்களுடைய மனைவியை அடிக்கிறீர்கள் மற்றும் அது கூடாது” என்ற வார்த்தைகள் உங்களுடைய இரண்டாவது பெண் அல்லது இரண்டாவது மனைவி இதை ஒப்புக்கொள்ளுவார்- யோகினி என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,
நீங்கள் உங்களை ஒருக்காலும் யாருக்கும் அல்லது எதற்கும் அடிமையாக்க கூடாது. இது செல்லப்பா சுவாமிகளினதும் யோகர் சுவாமிகளினதும் அடிப்படைக் கொள்கை அத்துடன் அதுதான் உண்மையான சிவதொண்டு, நீங்கள் உங்களுடைய முதல் பெண்னை முறையாக பராமரிக்காவிட்டால் நீங்கள் கட்டாயப் படுத்தப்பட்டு அவவுடைய அடிமையாக மாறிவிடுவீர்கள் மற்றும் நீங்கள் உங்களுடைய உத்தியோகத்திற்கும் (British Leyland) அடிமையாகப் போகக்கூடாது. ஆகவே நீங்கள் கட்டாயம் உங்களுடைய முதலாளிக்கு நன்றாக விளக்கம் கொடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் உங்கள் உடலுக்கு அதிக வேலை கொடுக்காமல் நியாயமான
ஓய்வை கட்டாயம் கொடுக்கவேண்டும் என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முக்கியம். மற்றும் ஒரு விஷயம் மிகவும் முக்கியமானது என்று தான நினைக்கிறேன் – குறிப்பாக ஆரம்பத்தில் இருந்தே வலுவான “பெண்” கிடைத்ததற்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி. குறைவான உடற்பயிற்சி அநேகமாக நவீன வாழ்க்கையில் மக்களை பாதிக்கும், 75% நோய்களுக்கு காரணம் இது தான் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் பெரும்பாலானோர்கள் உட்கார்ந்து வேலை செய்பவர்களாக உள்ளனர்.
ஒருவர் வயதாகும் பொழுது மிகவும் பொருத்தமான உடற்பயிற்சி நடைப்பயிற்சி (குத்துச்சண்டை வீரர்கள் அல்லது விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக நடைப்பதைப் போல என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால்உங்கள் இயல்பான வேகத்தில் முடிந்தவரை நல்ல விறுவிறுப்பாக நடப்பது நல்லது) சுவாமி என்னைத் தினமும் 5 மைல்கள் நடக்கும்படி கூறியுள்ளார். மற்றும் அவருடைய விபத்து நேரும் வரை அவரும் இதைச் செய்துள்ளார். 60 வயதைத் தாண்டிய அவர் நாளில் அனேகமான நேரங்களிலும் யாழ்ப்பாணத்தைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். அவருடைய ஆரம்ப நாட்களில் மற்றவர்களால் பின்பற்ற முடியாத வேகத்தில் அவர் பல மைல்கள் நடப்பார் என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்படிப்பட்டவர் தான் “யோகசுவாமிகள் நீங்கள் முன்பு எனக்கு சொன்னதைப் போல் பெரிய நீண்ட உற்பத்தி தொழிற் சாலைக்குள் நடந்ததைப் போல இப்பொழுதும் நடப்பதற்கு உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் வார இறுதியில் நீண்ட நடைப்பயணத்திற்குச் செல்வதை வழக்கமாக்க முயற்சி செய்து பார்க்கவும் (உங்களிடம் கார் இருப்பதால் உங்களுக்கு சுலபமாக கிராமப்புறங்களுக்குச் செல்லக்கூடியதாக இருக்கும் ) அதிக நேரம் வேலை செய்வதிலிருந்து உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.கடவுள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கின்றார் என்பதைத் தவிர இங்கிருந்து ஒரு செய்திகளும் இல்லை.
ஆகவே எல்லாம் சரி.
உங்கள் இருவருக்கும் அன்புடனும் நல்வாழ்த்துக்களுடனும்
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
தொழிற்சாலையில் நான் மேற்கொள்வதெல்லாம் எனது கடமையே தவிர, எனது முதலாளியின் கோரிக்கையால் அல்ல என்று நான் சந்தசுவாமிகளிடம் விளக்கினேன்.
ஒரு தொழிற்சாலையின் சாமர்த்தியமான தொழில் முறைகளைப் பேணி நடக்க அந்த தொழிற் சாலையைச் சேர்ந்த ஊழியர்களின் வருமானம் மேம்படும். ஒரு தொழிற்சாலையில் சாமர்த்தியமற்ற தொழில்முறைகளை கைக்கொள்வதன் மூலம் தொழிற்சாலை ஊழியர்கள் குறைந்த ஊதியத்தைப் பெற்று அவர்கள் வாழ்க்கையை பரிபூரணமாக நடத்துவதற்கு இடையூறாக அமையும். எனது பொறுப்பில் நான் தொழிற்சாலையின் செய்கை முறைகளை மேலான தகுதியை அடைய அதற்குத் தேவையான வழிவகைகளை கைக்கொள்ளுவதால் அதன் விளைவு தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாத்தியமான வருமானத்தை கொடுக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தும்.
அந்தக் காலம் ஒரு போட்டி நேரங்களாக இருந்தது, எப்பொழுதெல்லாம் அந்த ஆலையில் செயல்பாடு வெற்றிகரமாக இருக்கும் பொழுது உற்பத்தியில் நேரடியாக தொடர்புடைய பணியாளர்கள் அதிக மேம்பட்ட பயன்களை (fringe benefits) பெற்றனர், மற்றும் மிகச்சிறந்த வாழ்க்கையையும் அனுபவித்தனர். எப்பொழுதெல்லாம் அந்த ஆலையில் செயல்பாடு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்குக் கீழே இறங்கினால் அதே பணியாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். நான் ஆலையினது செயல்பாடுகளை எப்பொழுதும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு மேலே இருப்பதை உறுதி செய்வேன், இதனால் அந்தப் பணியாளர்கள் எப்பொழுதும் பயனடைவார்கள். மேல் குறிப்பிட்டதை நான் சந்தசுவாமிகளுக்கு விளக்கி அது சிவதொண்டு கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது என்று எழுதியதற்கு சந்தசுவாமிகள் கைதடியிலிருந்து எழுதியது பின்வருமாறு:
கைதடி
21-12-1982
அன்புள்ள யோகிகள்,
உங்களுடைய கடிதங்களுக்கு மிக்க நன்றி.
ஆம், மார்க்கண்டு சுவாமிகள் அடிக்கடி என்னிடம் எடுத்துச் சொல்லி சுவாமி, கழிவறை சுத்தம் செய்யும் வேலையாளரைப் பார்த்து கேட்ட கேள்வி “நீ சிவபூசையா செய்கின்றாய்?” நீங்கள் சொல்வதைப்போல்: “சிவபூசை சிவதொண்டு கடவுளின் சேவை.” இதில் இருந்து விளங்குவது எந்த வேலையைச் செய்யும் பொழுதும் கடவுளுக்குச் செய்வதாக நினைத்துச் செய்யவேண்டும்.
எமக்காக அல்ல. யோகசுவாமிகள் மார்க்கண்டு சுவாமிகளுக்கு சொன்னவை: “உண்மையை உணர்ந்தவர்கள் கூட இணக்கமாக செய்ய வேண்டும். அப்படியே யோகசுவாமிகள் சமாதியடையும் வரை செய்து வந்தார்.
நாங்கள் எங்களுக்குக் கடவுள் தந்தவற்றை நன்றியுடன் ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரில் முழு நம்பிக்கை வைத்து இவைகள் தான் எமது வாழ்க்கைக்குச் சிறந்தவை என்று ஏற்றுகொள்ள வேண்டும். எதை இழந்தோமோ அவை எமது நன்மைக்கே என்றும் கடவுள் தேவையான மாற்றங்களைச் சரியான நேரத்தில் செய்வார் அல்லது எங்களைச் செய்ய வைப்பார். ஆகவே நாங்கள் எங்கள் வேலைகளைச் சரியாக செய்ய வேண்டும். ஒரு கழிப்பறை சுத்தம் செய்பவராக இருந்தாலும் ஒரு நாட்டை ஆளும் அரசனாக இருந்தாலும் தமது வேலையைச் சிறப்பாக செய்ய வேண்டும். ஒரு கழிப்பறை சுத்தம் செய்பவர் கழிப்பறையை சிறப்பாகச் சுத்தம் செய்தால் அவர் ஒரு நாட்டைச் சரியாக ஆளாத அரசனை விட மேலானவர்.
ஆனால் வேலை சிறப்பாக செய்யப்பட்டால் அது ஒரு சிவதொண்டு அல்ல. ஒரு முறை யோகசுவாமிகள் சொன்னார் “எப்போ நீ உண்மையை அறிகின்றாயோ அப்போது நீ வேலையை விடலாம் அல்லது தொடர்ந்து செய்யலாம். ஆனால் நீ உண்மையை அறியும் வரை வேலை செய்யத்தான் வேண்டும். ஞான அறிவு உனது வேலையில் இல்லை செய்யும் மனக்கோட்பாட்டில் தான் உள்ளது. இதை அறிந்த புத்திசாலி உண்மையான சிவதொண்டன் ஆவான்.
அனேகமான மக்கள் நன்றாகவும் கடுமையாகவும் தங்கள் முழு மனத்துடனும் தங்களுடைய வேலையைச் செய்கின்றனர். ஆனால் அது ஒரு வழியில் அல்லது மற்ற வழியில் பார்க்கும் பொழுது அவர்கள் செய்யும் வேலைகளை அவர்களுக்காகவே செய்கின்றனர். மற்றவர்களின் நலனுக்காக வேலை செய்வது கூட ஒரு வகையில் பாராட்டத்தக்கதாக இருந்தாலும், மற்றவர்களிடம் இருந்து தங்கள் மேல் நல்ல கருத்து வரவேண்டும் என்ற நோக்கத்தோடு செய்தார்கள் என்றால் அது சிவதொண்டு அல்ல. மற்றவர்களின் திருப்திக்காக அல்லது மற்றவர்கள் தங்களை என்னவாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் அல்லது விரும்புகிறார்கள் என்பதற்காக செய்கின்றார்கள் என்றாலும் அதுவும் சிவதொண்டு அல்ல. எது எங்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு சிறந்தது என்று எங்களுக்குத் தெரியாது.- கடவுளுக்கு மட்டும் தான் தெரியும், எனவே உண்மையில் நாங்கள் அவருடைய சேவையை செய்வதும், அத்துடன் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைப்பதும், மற்றும் அவர் நம் மூலம் செயல்பட அனுமதிப்பதும் (இவற்றைச் செய்தால்) மிகச் சிறந்தது. சுவாமி கூறியது போல் “கடவுளிடம் நீங்கள் சரணடையுங்கள். அவர் உங்களை வழிநடத்துவார். அவருடைய கையில் கருவியாக இருங்கள், அப்பொழுது முடிவில்லா ஆனந்தம் உண்டாகும்.”
வேலை என்பது கடவுளினது ‘சேவை’. சேவை என்பது ஒரு மனிதனுக்கு ஒரு நேரத்தில் அவனது வாழ்க்கையில் அவன் செய்யும் தீவிரமான செயல்பாட்டில் இருக்கலாம். மற்றொரு மனிதனுக்கு அல்லது அதே மனிதனுக்கு மற்றுமொரு நேரத்திலும் இருக்கலாம். அமைதியான நன்றியுணர்வும் மற்றும் ஆழ்ந்த சிந்தனையையும் பயிற்சி செய்தல் வேண்டும். சுவாமி ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார் “சும்மா இருப்பவர்களே மனித குலத்தின் உண்மையான ஆதரவாளர்கள் ஆவார்”.
எந்த இரண்டு மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல, எனவே உண்மையை அறியும் இரண்டு பாதைகளும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. சுவாமி கூறினார் “ஒவ்வொருவரும் தனக்குத் தகுந்த பாதையைத் தேடிக் கொள்ளவேண்டும்”.
.
கடவுளிடம் பூரண சரணாகதி என்றால் முழுமையான பற்றின்மை. நீங்கள் கடிதத்தில் எழுதினீர்கள் “என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமாகச் செய்யும்படி எனது அதிபர் என்னிடம் ஒருபோதும் கேட்கவில்லை”. எனக்கு நான் செய்வது எல்லாம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்த சொந்த ஆர்வமும், விருப்பமும் தான். அந்த ஆர்வமும் அன்பும் ஒரு வகையில் மிகவும் நல்லது, அது உங்களை நல்ல நிலைக்கு வழிநடத்துகிறது. அதில் உங்கள் சொந்த நோக்கத்திற்காக மட்டும் இருந்தால் அது எல்லாவற்றையும் உங்களால் செய்யமுடியாமல் போயிருக்கும். சுவாமி என்னிடம் கூறியுள்ளார் “அதிக நித்திரை கூடாது, அதிக வேலை கூடாது, அதிகமான எவையும் கூடாது”.
நீங்கள் அதிகமாகத் தூங்கினால், நீங்கள் தூக்கத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம், நீங்கள் அதிக வேலை செய்தால் நீங்கள் வேலையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருக்கிரீர்கள் என்று அர்த்தம். ஆனால் நீங்கள் படிப்படியாகப் பற்றற்று இருப்பதைக் கற்றுக் கொண்டால் உங்களுக்கு கடவுள் நீங்கள் என்ன வேலை செய்ய வேண்டும், எவ்வளவு வேலை செய்ய வேண்டும், எப்பொழுது வேலையை நிறுத்த வேண்டும் என்று சொல்லுவார் – உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறிய விஷயங்களைக் கூட நீங்கள் பற்றற்று இருந்தால் வெற்றி பெறலாம். இந்த நிலையை அடையும் போது உங்களை “சிவதொண்டன்” என்று அழைக்க உங்களுக்கு தகுதி யுண்டு.
உங்கள் இருவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய அன்புடனும் அனைத்து நல்வாழ்த்துக்களும்.
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
P.S. சிவதொண்டனைப் பற்றி நான் எழுதியது அனைத்தையும், மேலும் பலவற்றையும் “குருநாதன் அருள்மொழிகள்” இல் காணலாம் (நற்சிந்தனையிலுள்ள உரைநடைப் பகுதியிலும் காணலாம்)
.
P.P.S – மார்க்கண்டு சுவாமிகள் நலமுடன் எப்பொழுதும் போல் இருக்கிறார். சுவாமி என்னிடம் ஒரு தடவை கூறியுள்ளார் “ஒரே தன்மை ஒரு பலம்” “பார்ப்பதெல்லாம் சிவமாகப் பாருங்கள்” “செய்வதெல்லாம் சிவதொண்டாகச் செய்யுங்கள்” “நான், என்னுடையது என்பதை விட்டுவிடுங்கள்” (குருநாதன் அருள்மொழிகள்)
எனது தலைமையில் புதிய மோட்டார் வாகனத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் பலவிதமான சவால்களை எதிர்நோக்கிய சமயம் என் மனதில் “கடவுள் கிருபை” தான் இந்த வேலையை முடிக்க உதவி செய்யும் என்ற நம்பிக்கை உருவாகியது. இதைப் பலப்படுத்தும் குறிக்கோளோடு நான் என் ஊழியர்களிடம் எதிர் வரும் நத்தார் பண்டிகையை எவ்வாறு அமைதியாக தொழிற்சாலையில் அனுசரிக்கலாம் என்ற கேள்வியைக் கேட்டேன்.
அதற்கு அவர்கள் தந்த ஆழ்ந்த பதில்களின்படி நத்தார் பண்டிகை சம்பந்தமான சில படங்களை வைத்து ஒரு பெரிய Christmas Cardஐ உண்டாக்கி தொழிற்சாலை வாசல்களில் தொங்க விட்டோம். இச் செய்தியை கேள்விப்பட்ட Jaguar நிர்வாகத் தலைவர் (Chairman Sir.John Egan) தன் நிர்வாகக் குழுவையும் கூட்டி வந்து எங்கள் Christmas Card ஐ பார்த்து பெருமைப்பட்டார். புதிய Jaguar மோட்டார் வாகனம் உலகிற்கு சரியான வழியில் குறிப்பிடப்பட்ட சமயத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
1982ஆம்ஆண்டின் சந்தசுவாமிகளின் சகோதரர் Sir.Peter Ramsbotham, சகோதரி Joan சந்தசுவாமிகளின் வோண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் வந்து மூவரும் Lords Prayers என்ற புத்தகத்தை எழுதும் வேலைகளைக் கைக்கொண்டனர். இந்த நீண்ட வாய்ப்பு அவர்கள் மூவரும் பல வருடங்களின் பின் ஒன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கியதோடு, Sir.Peter Ramsbotham மின் மனைவி Frances உடைய திடீர் மரண இழப்பின் வேதனையை மறக்கவும் உதவியாக இருந்தது.
நான் எனது தொழிற்சாலையில் எவ்வாறு புதிய Jaguar மோட்டார் வாகனம் உருவாக்கி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதைப் பற்றி சந்தசுவாமிகளுக்கு எழுதிய கடிதத்திற்கு அவர் கைதடியிலிருந்து அனுப்பிய பதில் பின்வருமாறு:
கைதடி
13-01-1983
எனது அன்புள்ள யோகிகள்,
உங்களுடைய கடிதங்களுக்கு மிக்க நன்றி.தொழிற்சாலையில் நீங்கள் செய்த ‘அடிப்படை’ விஷயங்கள் மற்றும் இதனால் ஊழியர்களுடைய மனதை இது மிகவும் வசீகரித்துள்ளது என்று நீங்கள் என்னிடம் கூறியது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த விஷயங்கள் என் மனதில் ஒரு உண்மையான சிவதொண்டனுக்குரிய செயல்களின் சான்றுகள் என்று படுகின்றது. இதைத் தான் நான் இப்பொழுது புரிந்து கொண்டது உண்மையான கிறிஸ்தவத்தின் ஆழ்ந்த நம்பிக்கை என்று.
பெரும்பாலும் நான் உங்களுக்கு முன்பு கூறியிருப்பேன், கிட்டத்தட்டக் கடைசி வார்த்தைகள் சுவாமி மகாசமாதியடைவதற்கு முன்னர் என்னிடம் கூறியது “ஆரம்பத்தில் ஒரு சொல், அந்த சொல் கடவுளுடன், அந்த சொல் கடவுள்”. (இந்த சொற்கள் தான் St.John’s Gospel – லின் ஆரம்பச் சொற்கள்) “இது தான் எனது சமயம். நான் ஒரு உண்மையான கிறிஸ்தவன் – உன்னைப் போல அல்ல.”அதிலிருந்து உண்மையான கிறிஸ்தவன் என்றால் என்ன என்ற விளக்கத்தை அறியத் தேடத்தொடங்கினேன். அத்துடன் அதையே பயிற்சி செய்யவும் தொடங்கினேன். சுவாமி என்னிடம் “உங்களுக்கு கிறிஸ்தவம் தேவையில்லை” என்று கூறினார். நான் எனது வாழ்க்கையில் சந்தித்த உண்மையான கிறிஸ்தவனும் ஒரு சிறந்த சிவதொண்டனும் யோகசுவாமிகள் தான். இந்த நாட்களில் கிறிஸ்தவமும் இந்துமதமும் போலித் தனத்தை மேலும் மேலும் வளர்க்க உதவுகின்றன, இது தான் மதங்களுக்குப் பிரதான எதிரி மற்றும் இப்படிப்பட்ட மதங்கள் தான் உலகில் இருக்கின்றன. இப்படியான மத போதனைகள் இமயமலையில் உள்ள துறவிகளின் ஆசிரமங்களில் இல்லை. சுவாமி கூறியது “ நீங்கள் கட்டாயம் அனைவருடனும், அனைவருக்கும் மத்தியிலும் வாழ வேண்டும், ஆனால் நீங்கள் உங்களுடைய உண்மையான தனித்துவத்தை ஒரு போதும் மறந்துவிடக் கூடாது”. (Words of our master P58) இதன் அர்த்தம் நாம் தேவாலயங்களுக்கோ, கோவில்களுக்கோ போகக் கூடாது என்பதல்ல. ஆனால் வெளிப்புற மதப்பழக்கவழக்கங்கள் உண்மையில் எதைக் குறிப்பிடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தம் என்ன என்றால் உண்மையான மதத்தின் உண்மைகள் அவற்றில் பொதிந்துள்ளன. அவை உண்மையின்; சின்னங்கள் அவற்றைப் பெரும்பாலும் போதுமான அளவு வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படுத்த முடியாது. சுவாமியும் என்னிடம் கூறியுள்ளார் “சமய சடங்குகள் மற்றும் சமயவிழாக்கள் தத்துவ உண்மைகளை வெளிப்படுத்துகின்றன” (Words of our master P-101) முதலில் தேவைப்படுவது புரிதல் – குருட்டு நம்பிக்கை பயனற்றது, பயனற்றதைவிட மோசமானது: ஏனெனில் அது புரிந்து கொள்வதற்கு ஒரு தடையாக இருக்கிறது. அதனால் தான் எனது கடைசிக் கடிதத்தில் சுவாமியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினேன் “நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உணராமல் வராது” (Words of our master P-74) இதையெல்லாம் பார்க்கும் போது கிறிஸ்தவ நாடாக இருக்க வேண்டிய இங்கிலாந்துக்கு இது அவமானம். உங்களுடைய பணியாளர்கள் “நாங்கள் இதுவரை இப்படி நடத்தப்படவில்லை” என்று கூறியிருக்க வேண்டும். (நீங்கள் இதை உங்களுடைய Chairman னுக்கு சொல்லலாம்) நீங்கள் “நம் சமூகத்தில் இந்த ‘அடிப்படைப்’ பிரச்சினைக்கான காரணங்களை இப்பொழுது நாங்கள் அறிவோம்” என்று எழுதியதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மற்றும் நவீன தொழில்துறை நிறுவனங்களின் பரந்த அளவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
உங்களுக்கு அண்மையில் பதவி உயர்வு கார் Body plant இல் கிடைத்ததைக் கேள்விப்பட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியது “இப்ப இருக்கும் வீட்டைவிட நல்லதும் மற்றும் பெரியதுமாகிய வீட்டைப் பார்க்க வேண்டும்”. சில இடங்கள் – உதாரணமாக Sheffield (40 வருடங்களுக்க முன்பு) ஒரு வடிவான கிராமம். அத்துடன் ஒரு சில மைல்கள் மட்டும் தான் மத்திய நகரத்தில் இருந்து தள்ளியுள்ளது. இது போல் Castle Bromwich இலும் இருந்தால் நீங்கள் முயற்சி செய்து தொழிற்சாலைப் பகுதியை விட்டு வெளியில் ஒரு இடத்தைப் பாருங்கள். ஒரு திருப்திகரமான வீட்டைத் தெரிவு செய்வது ‘சக்தி’ க்கு மிக முக்கியமானது ‘சிவன்’ ஐ விட, இங்கு குறிப்பிடுகையில் சிவா (நீங்கள்) ஒரு நாள் முழுவதும் உற்பத்தி தொழிற்சாலையில் நடனமாடுவீர்கள், அந்த வேளையில் சக்தி (சிவயோகி) இதைப் பார்க்க முடியாமல் ‘சிவகாமி’ வேடத்தில் நடிப்பார். அவர் பெரும்பாலும் மற்ற விஷயங்களில் சிறுவர் பள்ளி/விளையாட்டுப்பள்ளி நடத்துதல் போன்றவற்றை இங்கிலாந்திலும் யாழ்ப்பாணத்தில் செய்தது போல் செய்யலாம். எல்லாம் பார்ப்போம். அவர் Open Universityயில் ஒரு படிப்பை தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதை அறிய நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எல்லாம் சரி
உங்கள் இருவருக்கும் அன்புடனும் நல்வாழ்த்துக்களுடனும்
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
P.S – ‘அடிப்படை’ என்ற சொல் கடந்த 20 வருடங்களாக ஆங்கிலப் பயன்பாட்டில் ஓரளவு புதிய அர்த்தத்தைப் பெற்ற ஒன்றாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன், மற்றும் இலங்கையில் நீண்ட காலம் வாழ்ந்ததன் காரணமாக எனது ஆங்கிலம் பழமையாக இருக்கலாம். Oxford English அகராதியில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் Fundamental (அடிப்படை). நீங்கள் எழுதிய கடிதத்தில் நீங்கள் உற்பத்தி ஆலையில் செய்த மிக ‘அடிப்படை’ யான விஷயம் என்று குறிப்பிடும் பொழுது இந்த விளக்கத்தைத் தான் நீங்கள் என்னிடம் தெரிவிக்க விரும்பினீர்களா? பெரிய கிறிஸ்மஸ் அட்டையை காட்சிக்கு வைத்ததைவிட மற்ற அடிப்படை விஷயங்கள் என்ன என்பதை அறிய நான் ஆர்வமாக இருக்கின்றேன்.
நான் எங்களுடைய கடமைகளைப் பற்றி சந்தசுவாமிகளுக்கு எழுதிய பொழுது அதற்கு அவர் எழுதிய பதில்:
கைதடி
01-06-1983
எனது அன்புள்ள யோகிகள்,
உங்களுடைய கடிதங்களுக்கு மிக்க நன்றி.
உங்கள் இருவருக்கும் தொடர்ந்து எல்லாம் நல்லபடியாகச் செல்வதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் உங்கள் சகோதரரும் மைத்துனியும் ஒரு மகனைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்.
நீங்கள் என்னிடம் கேட்டுள்ளீர்கள் “நாம் எப்பொழுதும் திறந்த மனதுடன் நமது கடமைகளைச் செய்யும் பொழுது, அதே நேரத்தில் கடவுள் நம்மை வைத்துள்ள நிலைமைகளுக்கு நன்றியுள்ளவர்களாகவும் இருந்து கொண்டு இருந்தால், திறந்த மனப்பான்மையின் காரணமாக கடவுள் நம் மனதில் தேவையான ஆசைகளைத் தூண்டுகிறார் அல்லது கடவுள் சுட்டிக்காட்டி அதை அடைவதற்கு நமக்கு உதவுகிறார் என்று கருதுவது ஏற்கத்தக்கதா?
நான் இதற்கு சொல்லுவேன் – நீங்கள் உண்மையாக பற்றற்று இருந்தால் – அதாவது நீங்கள் உண்மையிலேயே “கடவுளிடம் சரணடைந்திருந்தால்” அவர் உங்களுக்குத் தந்த அனைத்தையும் நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த ஒரு ஆசைகளும் இல்லையென்றால் மட்டுமே கடவுள் உங்கள் ஊடாக செயல்படுவார் (Words of master P-94) மற்றும் அவர் விரும்பியதை நீங்கள் அடைவீர்கள்.
நீங்கள் இதையும் கேட்டுள்ளீர்கள் “உண்மை என்பது நம்மைப் பற்றியும் நம் கடமைகளைப் பற்றியும் புரிந்து கொள்வது என்று கருதுவது சரியாக இருக்குமா?
அதே சமயம் நாம் அதைச் செய்யத் தகுதியுடையவர்களாக இருக்கும் பொழுது அல்லது அதைச் செய்யத் தகுதிபெறும் வரை?
ஆம் – சுவாமிகள் கூறுவார் “நான் தான் உண்மை” (W.O.MP-82) மற்றும் உங்களுக்கு உங்களைப் பற்றி தெரிந்திருந்தால் (உயர்ந்த பொருளில்) உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும். எங்கள் கடமைகள், மற்றும் உண்மையில் நம் வாழ்வின் அனைத்து நிலைமைகளும், நம்மை அறிந்து கொள்ள உதவும் வழிமுறைகள் மட்டுமே.
இதை உங்கள் மனதில் வைத்துக்கொள்வது முக்கியம். மற்றும் அவற்றை ‘முடிவுகள்’ ஆகக் கருதாமலும் அவற்றுடன் கூடுதலாக இணைந்தும் இருக்க வேண்டாம்.
மார்க்கண்டு சுவாமிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.
எல்லாம் சரி,
எப்பொழுதும் போல்
சந்தசுவாமி
நான் சந்தசுவாமிகளுக்கு பாப்பரசர் (Pope) உடைய வருகை மற்றும் கொழும்புத்துறை சமாதி கோவிலில் இருந்த திருவடி காணாமல் போனது போன்றவற்றை எழுதிய பொழுது அதற்கு அவருடைய பதில் கடிதம் பின்வருமாறு:
கைதடி
12-06-1983
எனது அன்புள்ள யோகிகள்,
உங்கள் கடிதம் கிடைத்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், குறிப்பாக அந்தக் கடிதம் மிகவும் நல்ல செய்திகளைக் கொண்டிருந்தது. சுவாமிகளுடைய அனுக்கிரகத்தைப் பெறுவதில் மிகவும் நீங்கள் தயாராக இருந்ததற்கும், அவரது வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்ற முடிந்ததற்கும் நல் வாழ்த்துக்கள்.
பாப்பரசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், குறிப்பாக இளைய தலைமுறையான நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் தெரிகிறது.
மார்கண்டு சுவாமிகள் நன்றாக இருக்கிறார், ஆனால் மற்றவர்களைப் போல் அவருடைய உடல் துரிதமான வேகத்தில் படிப்படியாக கொஞ்சம் பலவீனமடைந்து வருவதாகத் தெரிகிறது.
இந்த ஆண்டு துடுப்பாட்டம் (Cricket) பேட்டிங் சராசரி எப்படி இருக்கிறது?
எனக்கு இப்பொழுது இங்கிலாந்தில் இருந்து ஒன்றும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஏதாவது, எப்பொழுதாவது தேவைப்பட்டால் நான் நிச்சயமாக உங்களுக்குத் தெரிவிப்பேன். இங்கு எல்லாம் நன்றாக இருக்கின்றன.
உங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துக்களுடன்,
எல்லாம் சரி
எப்பொழுதும் போல்
சந்தசுவாமி
P.S – ஒருவராலும் அப்புவுடைய திருவடியைத் திருட முடியாது.
பின்னர் எனது சகோதரி திருமதி சிவயோகேஸ்வரி சிவதாசன் அவர்கள் இந்தியாவிலுள்ள சிதம்பரத்திலிருந்து புதுத் திருவடியை விமானம் மூலம் கொழும்புத்துறை ஆசிரமத்திற்கு கொண்டு வந்தார். அவருக்கு பலாலி விமான நிலையத்தில் (யாழ்ப்பாண விமான நிலையம்) இருந்து கொழும்புத்துறை ஆசிரமத்திற்கு போவதற்கு ஒரு அன்பர் தானாகவே முன்வந்து தனது வண்டியில் இவரை ஏற்றிக் கொண்டுவந்து ஆசிரமத்தில் சேர்த்தார். அந்த நேரத்தில் அந்த அன்பரின் அடையாளம் தெரியவில்லை, ஆனால் அது அப்புவினது தெய்வீக அருட்செயல் என்று இப்பொழுது எங்களுக்குத் தெரிகிறது.
சந்தசுவாமிகள் 05-12-1978 அன்று இலங்கைக்கு வந்த பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்கு 14-05-1984 அன்று திரும்பினார். இவர் சென்று சில நாட்களின் பின்னர் மார்க்கண்டு சுவாமிகள் 29-05-1984 அன்று மகாசமாதியடைந்தார்.
சந்தசுவாமிகள் இங்கிலாந்துக்கு வந்ததும் எங்களுடைய தொடர்பு பின்வருமாறு:
East Lane,
Ovington Nr. Alresford
Hants
Tel-09623-2515 30-05-1984
எனது அன்புள்ள யோகிகள்,
உங்களுடைய கடிதங்களுக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் இங்கிலாந்துக்கு திரும்பியது, மற்றும் தற்பொழுது நான் எனது சகோதரருடன் மேல் குறிப்பிட்ட முகவரியில் தங்கியுள்ளேன். உங்கள் இருவரையும் மீண்டும் வந்து பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன். ஆனி மாதம் வார இறுதி 23/24 நாட்கள் உங்களுக்கு வசதியாக இருக்குமா?
எல்லாம் சரி
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
அப்பிள் மரம் நடும் உத்தேசம் கொண்டிருந்த எங்கள் தோட்டம் தொடர்பாக பல கலந்துரையாடல்களை சந்த சுவாமிகள் எங்கள் வீட்டுக்கு வருகை தரும்போதெல்லாம் மேற்கொண்டோம். சந்தசுவாமிகள் எங்களிடம் வரும்பொழுது அப்பு அவருக்குக் கொடுத்த ஒரு வெள்ளித் தட்டையும் கொண்டு வந்து எங்கள் வீட்டில் வைத்து விட்டுச் சென்றார். இதன் பின்னர் நாங்கள் எப்பொழுதும் இந்த வெள்ளித் தட்டில் தான் சந்தசுவாமிகளுக்கு உணவு பரிமாறுவோம்.
இப்பொழுது நாங்கள் செய்த பிரசாதங்களை அப்புவால் சந்தசுவாமிகளுக்குக் கொடுக்கப்பட்ட வெள்ளித் தட்டில் வைத்து எங்களுடைய சுவாமி அறை (பிரார்த்தனைக்குரிய அறை) க்குள் முக்கிய தினங்களில் (கடையிற் சுவாமிகளுக்கு பூரட்டாதி நட்சத்திர நாட்கள், செல்லப்பாசுவாமிகளுக்கு அஸ்வினி நட்சத்திர நாட்கள், யோகசுவாமிகளுக்கு ஆயிலியம் நட்சத்திர நாட்கள், மார்க்கண்டு சுவாமிகளுக்கு கார்த்திகை நட்ச த்திர நாட்கள், சுப்ரமுனிய சுவாமிகளுக்கு சித்திரை நட்சத்திர நாட்கள், சந்தசுவாமிகளுக்கு மூலம் நட்சத்திர நாட்கள்) படைப்போம்.
East Lane,
Ovington Nr. Alresford
Hants
Tel – 09623-2515 09-01-1985
அன்புள்ள யோகிகள்,
மறு – அப்பிள் மரங்கள் பயனுள்ள குறுக்கு மகரந்தச் சேர்க்கைகளுக்காக வெவ்வேறு வகைகளான இரண்டு மரங்களை நடுவது நல்லது என்று தோன்றுகிறது. இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் இது முற்றிலும் தேவையில்லை. உங்கள் விஷயத்தில், இரண்டு மரங்களும் வீடுகளால் பிரிக்கப்பட்டு இருப்பது குறுக்கு மகரந்தச் சேர்க்கைகளுக்கு இடையூராக இருக்குமா என்பது தான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நீங்கள் மரங்களை வாங்கும் இடத்தில் இதைப் பற்றி அறிந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் இரண்டு மரங்களை நட முடிவு செய்தால், Worcester Pearmain மற்றும் Laxton’s Superb ஆகியவற்றை பரிந்துரைக்கின்றேன்.
Worcester Pearmain விரைவில் பூக்க ஆரம்பித்துவிடும். புரட்டாசி இரண்டாவது வாரம் முதல் ஐப்பசி வரை பழங்கள் பறிப்பதற்குத் தயாராக இருக்கும்.
Laxton’s Superb என்பது Cox’s Orange Pippin சந்ததியிலிருந்து வந்தது. (இது என் கருத்துப்படி). இது Worcester Pearmain ஐ விட தாமதமாகத்தான் பூக்கத் தொடங்கும். புரட்டாசி நாலாவது வாரம் மட்டில் பழங்கள் பறிப்பதற்குத் தயாராக இருக்கும், மற்றும் அதை உபயோகப்படுத்துவதற்கான பருவம் கார்த்திகையில் இருந்து பங்குனி வரை. Laxton’s Superb க்கு அதிக நைட்ரஜன் உள்ள மண் தேவை. Worcester Pearmainனுக்கு குறைய நைட்ரஜன் உள்ள மண் தேவை ஆனால் பொட்டாசியம் உள்ள மண்ணாகவும் இருக்க வேண்டும். அனைத்து அப்பிள் மரங்களுக்கும் மண்ணில் நல்ல வடிச்சல் தேவை.
அனேகமாக மரங்கள் நடுவதற்கான பருவம் கார்த்திகை தொடக்கம் பங்குனி வரையான காலப்பகுதி. கார்த்திகையில் நட்டால் அடுத்த வருடத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொட்டிகளில் வளர்க்கப்படும் மரங்கள் உறைபனி காலநிலையைத் தவிர எந்த நேரத்திலும் நடலாம்.
உங்கள் நோக்கங்களுக்குள்ள-புதர் வகைகள் சிறந்தவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதிலும் திரும்பவும் நீங்கள் நாற்றுக்களை வாங்கும் இடத்தில் நல்ல அறிவுரைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஆகவே திருவாதிரை நாளை விமரிசையாகக் கொண்டாடியதற்கு நான் நன்றி சொல்லத்தேவையில்லை. சுவாமி “நன்றி சொல்லத்தேவையில்லை, நன்றி சொல்லத்தேவையில்லை” என்று சொல்லியுள்ளார். மற்றும் திருவாதிரை நாளன்று இரண்டு சிறந்த சமையற்காரர்களின் முயற்சிகள் மிகவும் பிரபல்யம் ஆனவை என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
எல்லாம் சரி
உங்கள் இருவருக்கும் எனது அன்புடன்
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
சந்தசுவாமிகள் பல்வேறு செடிகளைப் பற்றியும் மற்றும் புதர்களைப் பற்றியும் தொடர்ந்து விளக்கமளித்து வந்தார்.
East Lane,
Ovington Nr. Alresford
Hants
Tel- 09623-2515
15-03-1985
அன்புள்ள யோகிகள்,
கடந்த 3 வாரங்கள் வெளியில் தங்கி விட்டு நேற்று திரும்பியதும் நான் உங்கள் கடிதத்தைக் கண்டேன். அதற்கு மிக்க நன்றி.
நீங்கள் பரிந்துரைப்பது போல் பங்குனி மாதக் கடைசி வாரத்தில் உங்களோடு வந்து தங்குவதற்கு என்னால் முடியாமல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், காரணம் நாங்கள் Alresford டில் அச்சடித்த புத்தகம் அக்காலகட்டத்தில் தான் முடிக்கப்படும் (நாம் நம்புகிறோம்). மேலும் அனைத்து இறுதி ஏற்பாடுகளையும் சரிபார்க்க நான் இங்கு இருக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கியதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் உழைப்பின் முடிவுகளைப் பார்க்க ஆவலுடன் இருக்கின்றேன். உங்களுடைய Dahlias செடிகள் நன்றாக இருக்கின்றனவா? எனது சகோதரருடைய Dahlias எல்லாம் இம்முறை வந்த கடுமையான உறைபனி காரணமாக அழிந்துபோய் விட்டன. அப்படி இருந்தும் அவை அனைத்தும் வெளியில் எடுக்கப்பட்டு ஒரு தொட்டியில் வைக்கப்பட்டுள்ளன.
சிவயோகிக்கு அவரது தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். சிறு பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் உங்கள் யோசனைகள் தொடர்பாக நீங்கள் இன்னும் ஏதாவது செய்திருக்கின்றீர்களா?
எல்லாம் சரி
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
Midford Place Midford Bath BA2 7BX
Tel: (0225) – 837762
11-05-1985
அன்புள்ள யோகிகள்,
உங்களுடைய கடிதங்களுக்கு மிக்க நன்றி.
மற்றும் உங்களுடைய வைகாசி விடுமுறைக்கு என்னை உங்களோடு வந்து தங்குவதற்கான உங்களது அன்பான அழைப்புக்கும் நன்றி. எனக்கு உங்களிடம் வைகாசி 25 வந்து 28 வரை நிற்க விருப்பமாகவுள்ளது. எனது சகோதரர் பரிந்துரைத்தது என்ன வென்றால் உங்களுக்குப் பொருத்தமாக இருந்தால் 28ஆம் திகதி East Lane க்கு நீங்கள் என்னை மதிய உணவு நேரத்திற்கு கூட்டி வந்து பின்னர் இரண்டு இரவுகள் அங்கேயே தங்கிவிட்டு 30ஆம் திகதி Walmley க்குத் திரும்பலாம் என்று.
நான் இங்கு 25ஆம் திகதி வரை தங்கியிருப்பேன். எப்பொழுது உங்களுக்கு வசதியாக இருக்கின்றதோ, அப்பொழுது முன்பு போலவே என்னை Didcot ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லலாம்.
புல்தரையைச் செய்வதற்காக புல் விதைகளை விதைப்பதற்குப் பதிலாக புற்களைக் கொண்ட தரைவிரிப்பை உபயோகப்படுத்தும் யோசனையைப் பற்றி Don னிடம் நான் கேட்டேன். அவரும் அது நல்லது என்று ஏற்றுக்கொண்டார், அதுவும் நன்றாக மண்தரையில் விரிக்கப்பட்டிருந்தால், நீங்களும் நல்ல புல்தரைவிரிப்பை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சாதாரண புற்தரைவிரிப்பை வாங்கினால் அத்துடன் சேர்ந்து வேறுவிதமான களைகளும் வந்து விடும், பின்பு அதை அழிப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் நல்ல புற்தரைவிரிப்பை வாங்குவதென்றால் விலை உயர்வாக இருக்கும், அதனால் தான் அவர் புல் விதைகளை விதைப்பதற்குப் பரிந்துரைத்தார்.
நீங்கள் தேர்வு முடிவுகளைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?
நீங்கள் இருவரும் நலமுடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் 25ஆம் திகதி (D.V) மீண்டும் சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எல்லாம் சரி
அன்புடன் எப்பொழுதும் போல்
சந்தசுவாமி
சந்தசுவாமிகள், Don என்ற அவருடைய தோட்டக்காரருடன் வந்து சில நாட்கள் எங்களுடன் தங்கினார்.
East Lane, Ovington,
Nr Alresford,
Hants. SO24 0RA
(Telephone No: 096273 2662)
31-07-1985
எனது அன்புள்ள யோகிகள்,
உங்களுடைய தந்தி தவறான இடத்திற்குப் போயிருக்கலாம், காரணம் என் சகோதரர் அதைப் பெறவில்லை என்று கூறினார். ஆனால் நீங்கள் அதை அனுப்பியதை அவர் மிகவும் பாராட்டுகிறார். மற்றும் அதற்கு நன்றி சொல்லும்படி என்னிடம் கேட்டார்.
கடந்த வாரம் எங்கள் இருவரையும் அன்புடனும் ஆதரவுடனும் உங்கள் இடத்தில் உபசரித்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். Don ஐ அன்புடன் உபசரித்ததற்கும், அவரை Jaguar தொழிற்சாலைக்கு கூட்டிச் சென்று மோட்டார் வாகனம் செய்யும் முறைகளைக் கண்டு வியக்கும்படி செய்ததற்கும் நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்.
எல்லாம் சரி
உங்கள் இருவருக்கும் அன்புடன்
எப்பொழுதும் போல் உங்களின்
சந்தசுவாமி
செங்கலடி (இலங்கை) சிவதொண்டன் நிலையத்தில் சந்தசுவாமிகளோடு ஐயாவும் (ஸ்ரீ விஜயாந்த சர்மா) தங்கியிருந்து வழமையான பூசைகள், விவசாயப் பணிகள் யாவற்றிலும் சந்தசுவாமிகளுக்கு உதவி புரிந்தார். 1977ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் சந்தசுவாமிகள் சிவதொண்டன் சபையிடம் சிவதொண்டன் நிலையத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறினார். ஐயா தொடர்ந்து சிவதொண்டன் நிலையத்தில் இருந்து பின் 1980ஆம் ஆண்டில் வெளிக்கிட்டு 1985ஆம் ஆண்டில் Switzerland வந்த அடைந்தார். சந்தசுவாமிகள் என்னையும் சிவயோகியையும் Switzerlandடில் ஐயாவைக் கண்டு அவரின் உடல் நலத்தை அறிந்து வரும்படி கேட்டுக் கொண்டார்.
Midford Place Midford
Near Bath Avon BA2 7BX
19-09-1985
அன்புள்ள ஈஸ்வரன்,
நீங்கள் சுவிட்சர்லாந்து (Switzerland)க்குச் சென்று ஐயாவைப் பார்க்க முடிந்தால், அது ஒரு சிறந்த விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் – அவருக்காகவும், சிவயோகிக்காகவும், உங்களுக்காகவும், எனக்காகவும் மற்றும் உங்கள் பயணத்திற்கான செலவை நான் செலுத்த விரும்புகிறேன். நான் சில வாரங்கள் Mary யுடன் தங்குவதாக உறுதியளித்துள்ளேன், இல்லாவிட்டால் நானும் உங்களுடன் வந்திருப்பேன். ஆனால் உங்களுக்கு ஒரு வேளை வசதியிருந்தால் நீங்கள் திரும்பி வரும் வழியில் Oxford டுக்கு வந்து என்னிடம் உங்கள் பயணத்தைப் பற்றிக் கூறலாம்.
எல்லாம் சரி,
உங்கள் இருவருக்கும் அன்புடன்,
எப்பொழுதும் போல் உங்களின்,
சந்தசுவாமி







