அப்புவுடைய கடிதம் 1955ஆம் ஆண்டில் எழுதப்பட்டு சிவதொண்டன் பத்திரிகையின் 80ஆம் ஆண்டு நிறைவு வெளியீட்டில் வெளியிடப்பட்டது.

தன்மையால் வேறலேன் வேதாந்த சித்தாந்த
சமரச சுபாவமிதுவே.’
என்னும் தாயுமானவர் அருமைத் திருவாக்கே இதற்குப் போதிய சான்று.
சிவதொண்டன் மலர் 1. இதழ் 3 – 1935.
12-02-1935 தொடக்கம் யோகசுவாமிகளின் பாடல்களும், அருள் வாசகங்களும் அவர்களுடைய அனைத்து அடியார்களாலும் பதிவு செய்யப்பட்டன. அதில் யோகசுவாமிகளால் எழுதப்பட்ட பாடல்களும், அவர் பாட மற்றவர்களைக் கொண்டு எழுதப்பட்ட பாடல்களும் “சிவதொண்டன்” பத்திரிகையில் “நற்சிந்தனை” என்ற தலைப்பின் கீழ் வெளிவரத்தொடங்கின.
தை மாதம் 1940ஆம் ஆண்டில் திரு.திருநாவுக்கரசு செல்வி பொ.பரிமளரெட்னத்தைத் திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதியருக்கு 25-12-1940 இல் “செந்தில்செல்வம்” என்ற பெண் குழந்தை பிறந்தது. திரு. திருநாவுக்கரசின் தாயார் திருமதி சம்பந்தன் அவர்கள் தனது புதிதாகப் பிறந்த பேத்தி செந்தில்செல்வத்தை யோகசுவாமிகளிடம் கொண்டு சென்று அவரை “அப்பு” (பாட்டா) என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந் நாள் முதல் யோகசுவாமிகள் “அப்பு” என்று மிகவும் நெருங்கிய .திருநாவுகரசு குடும்பத்தினரால் அழைக்கப்பட்டார். “அப்பு” என்று யோகசுவாமிகளைப் பலருக்குத் தெரியப்படாவிட்டாலும் திருநாவுகரசு குடும்பத்தினருக்கு அது மிகவும் பொருத்தமாக இருந்தது. யோகசுவாமிகள் திருநாவுகரசுவை “தம்பி” என்று 1914ஆம் ஆண்டு குடிசைக்கு வந்த நாள் தொடக்கம் அழைத்து வந்தார்.
திருநாவுகரசு தம்பதியருக்கு யோகசுவாமிகளின் ஆசீர்வாதத்தோடு மூன்று பிள்ளைகள் கிடைத்தன 1.செந்தில்செல்வம், 2. திருஞானசம்பந்தன், 3. திருமகள்) திருமதி திருநாவுகரசுவின் ஒரே சகோதரி திருமதி பாக்கியரெட்னம் கந்தையாவிற்கும் ஐந்து பிள்ளைகள் (1.சிவயோகரெட்னம், 2. சிவயோகநாதன், 3.சிவயோக ஈஸ்வரி. 4. சிவயோகஈஸ்வரன் 5. சிவயோகன்) கிடைக்கப் பெற்றனர். அவர்களாலும் யோக சுவாமிகள் “அப்பு” என்றே அழைக்கப்பட்டு அவர் ஒரு கடவுளின் மறுபிறவி என்று தெரியாத நிலையில் பாதுகாக்கப்பட்டு அவர்களால் தங்களது ஒரு தாத்தாவிற்கு காட்டும் பாசத்துடன் எந்த ஒரு கட்டுபாடுகளும் இல்லாமல் அப்புவிற்கு தங்கள் கடமைகளைச் செய்து வந்தனர்.
திரு.திருநாவுகரசுவின் மாமனார் திரு.வல்லிபுரம் (தாயாரின் சகோதரர்) இறந்த பின் அப்பு மண்கும்பானிலிருந்து இளம்வயதான வல்லிபுரம் என்ற ஆசிரியரை திருநாவுகரசுவிற்கு பரம்பரை பரம்பரையாக வந்த விவசாய நிலங்களைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையில் அமர்த்தினார். இளம்வயதான வல்லிபுரத்தை பூநகரியிலுள்ள விவசாய நிலங்களைப் பார்க்கும் மேற்காப்பாளராக அமர்த்திய பின் அவருக்கு “முடி சூடா மன்னன்” என்று பெயர் வைத்து கீழ் வரும் கடிதத்தை 1955 ஆண்டில் எழுதியுள்ளார். இக் கடிதம் சிவதொண்டன் பத்திரிகையில் 80ஆம் ஆண்டு நிறைவு வெளியீட்டில் வெளியிடப்பட்டது.
பட்சமுள்ள வல்லிபுரமறிவது,
நிலத்தில் பயிரிடுகிறவன் நிலத்திற்கு நோகுமென்று
நினைத்து உழாமல், களை பிடுங்காமல், வரம்பு
கட்டாமல் விடுவானோ. அதுபோல் மற்றவர்களுக்கு
நோகு மென்று சொல்லி நீதியை கூறாமல் விடுவானோ.
ஒரு பொல்லாப்புமில்லை
முழுவதும் உண்மை
பூநகரியில் சிவராத்திரியைப் பல சடங்குகளுடன் அப்பு நடத்தினார். அதில் ஒன்று பூநகரியிலிருந்து கொழும்புத்துறைக்குப் பாதயாத்திரை.
அப்பு தொடர்ந்து மததத்துவங்கள், நற்சிந்தனைப் பாடல்கள் ஆகியவற்றை நன்கு கற்பதற்கு எங்களை வழிகாட்டியும் எங்களை ஒரு நல்ல அர்ப்பணிப்புள்ள குடிமக்களாக வருவதற்கான பயிற்சிகளையும் வழங்கினார். அப்பு நல்ல உதாரணங்களைக் காட்டி நல்ல நடைமுறைகளைச் செய்யும் வழிகளையும் தனிப்பட்டதும் சமூகத்திற்கும் செய்யக் கூடிய கடமைகளைப் பயமில்லாமலும் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமலும் தரும நெறியிலிருந்து விலகாமலும் நாங்கள் செய்வதற்கும் கற்பித்தார். அப்பு எங்களுக்கு ஒரு பாட்டாவை விட மேலானவராக இருந்தார். நாங்கள் எப்பொழுதும் அப்புவின் ஆசிரமத்திற்குச் சென்று அவருடனும் அவருடைய அடியார்களுடனும் கூடி சிவபுராணம், தேவாரங்கள், மற்றும் நற்சிந்தனைப் பாடல்களை துரையப்பா அப்பாவோடு சேர்ந்து பாடுவோம்
எங்கள் மேல் ஒரு தாயிற்கும் மேலான அன்பையும் பாசத்தையும் அப்பு பொழிந்து வந்தார். அப்பு தொடர்ந்து சமய அறிவுகளை சில அறிஞர்களை சந்தித்தும் ஆசிரமத்திற்கு அழைத்தும் பரவச் செய்தார். இக் கால கட்டத்தில் சிவதொண்டன் பத்திரிகையில் வெளிவர இருக்கும் கட்டுரைகளும் மற்றும் வேறு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தகவல்களும் அப்புவுடன் வித்துவான் K.K. நடராஜாவுக்கும் ஒரு தனிப்பட்ட சந்திப்பு நடத்தப்பட்டு இறுதியாக சரிபார்க்கப்பட்டு அச்சிலிடுவதற்கு அனுப்புவதற்காக அப் பத்திரிகை தயாராகும். பின்பு அச்சிலிடப்பட்ட பத்திரிகைகளும் சரிபார்க்கப்படும். இது திரு.திருநாவுகரசுவின் இல்லத்தில் உள்ள முன் பக்கத்திலுள்ள அறையில் நடைபெறும். அத்துடன் அங்கு பத்திரிகைகளை உறுப்பினர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைப்பதற்கு முத்திரையிடுதலும் நடைபெறும். இதனால் இந்த அறை சிவதொண்டன் அறை என்று சொல்லப்பட்டு வந்தது.
சங்கரப்பிள்ளை ஆசிரியரும் விஸ்வலிங்கம் ஆசிரியரும் வித்துவான் K.K. நடராஜாவிற்கு பத்திரிகைகளைத் தபால் மூலம் அனுப்புவதற்கான உதவிகள் செய்து வந்தனர்.சிவதொண்டன் அறை பின்பு சின்னண்ணையின் (திருஞானசம்பந்தர்) படிக்கும் அறையாக மாறியது.
அப்பு சில அர்ப்பணிப்புள்ள அடியார்களைத் தேர்ந்தெடுத்து சிவதொண்டன் சங்கத்தை நிறுவி, சிவ தொண்டன் பத்திரிகை வெளியீட்டை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். அவ் வேளையில் வித்துவான் K.K.நடராஜாவை சிவதொண்டன் இதழின் ஆசிரியராக நியமித்தார். இந்த அர்ப்பணிப்புள்ள சிவதொண்டன் சங்கம் மிகவும் தரமான பெரியபுராணத்தைப் பற்றிய கட்டுரைகளைச் சிவதொண்டன் இதழுக்குக் கொடுக்கத் தொடங்கியது. வித்துவான் K.K.நடராஜா இந்த மதிப்புமிக்க ஆசிரியர் பொறுப்பை 1935-1982 வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் அப்பு புராண வகுப்புகள், திருமுறை வகுப்புகள் ஆகியவற்றைக் கோவில்களிலும், கடைகளிலும், மற்றும் அடியார்களின் இல்லங்களிலும் நடத்தி வந்தார். சிவதொண்டன் பத்திரிகை வெளியீடு, சமய வகுப்புகள் நடத்துவதற்கும் மற்றும் தியானம் செய்வதற்கும் பொருத்தமான ஒரு இடம் அமைவதற்காக அப்பு அவருடைய அடியார்களை “சிவதொண்டன் நிலையம்” ஒன்று கட்ட வேண்டுமென்று வழிகாட்டினார். சிவதொண்டன் நிலையம் இருக்கும் இடம் மிக முக்கியமான சைவ அமைப்புகளால் (யாழ்பாணம் இந்து கல்லூரி, வைத்தீஸ்வரன் கோவில், வைத்தீஸ்வரன் வித்தியாலயம்) சூழப்பட்டு வண்ணார்பண்ணையில் இருந்தது.
அப்புவால் பாரம்பரியமாக செய்யப்படும் திருவடி பூசை சிவதொண்டன் நிலையத்தில் திருவடி தியான மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. சிவதொண்டன் நிலையத்தில் 4-11-1953இல் பால் காய்ச்சப்பட்டு 29-11-1953 இல் திறப்பு விழா நடத்தப்பட்டது. 30-11-1953 தொடக்கம் ஒவ்வொரு நாளும் பூசைகள் செய்யப்பட்டு மாலை நேரங்களில் புராணங்கள் படிக்கவும் தொடக்கி வைக்கப்பட்டன. அப்பு திரு.C.விஸ்வலிங்கம் என்பவருக்கு சிவதொண்டன் சங்கத்தின் சபைச் செயலாளராக 29-11-1953 அமர்த்தினார். திரு.C.விஸ்வலிங்கம் அந்தப் பதவியிலிருந்து 3-10-1959 இல் ஓய்வு பெற்றார்.
14-03-1965 (யோகசுவாமிகள் மகாசமாதியடைந்து முதல் ஆண்டு நிறைவு ஆயிலியம் நாள்) அன்று மற்றும் ஒரு சிவதொண்டன் நிலையம் சித்தாண்டி, செங்கலடி, மட்டக்களப்பில் சந்தசுவாமிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்டது. இதுவும் யாழ்ப்பாணத்திலுள்ள சிவதொண்டன் நிலையத்தின் அதே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருந்தது. அப்பு (யோகசுவாமிகள்) சில நாட்கள் சித்தாண்டியில் முன்பு அவர் செல்லப்பாசுவாமிகளின் வழிகாட்டுதலில் பாதயாத்திரை மேற்கொண்ட பொழுது வந்து தங்கியுள்ளார் (1910இல் நல்லூரில் இருந்து இலங்கையின் கிழக்கு கரையோரமாக செல்லும் பொழுது). 13-03-1965இல் சந்த சுவாமிகளால் திருவடி யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 14-03-1965 இல் செங்கலடியிலுள்ள சிவதொண்டன் நிலையத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அப்பு எப்பொழுதும் திருவடிப் பூசையை ஊக்குவிப்பார். ஒவ்வொரு இரண்டாம் பங்குனி திங்கள்களில் அப்புவால் திருவடிக்கு அபிஷேகமும் பூசைகளும் செய்யப்பட்டு திருவடிப் பூசை அனுசரிக்கப்படும். (அப்புவுடைய குரு செல்லப்பாசுவாமிகளால் இந் நாளில் அப்புவுக்கு தீட்சை வைக்கப்பட்டது.)
அப்பு திருவடிப் பூசையை அவருடைய பல நற்சிந்தனைப் பாடல்களில் விளக்கியுள்ளார். இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் கீழ் வருமாறு:
1.உந்தீபற
“ஆதாரத்தாலே நிராதாரஞ் சென்ற பின் பாதாரவிந்தமென் றுந்தீபற பலித்தது பூசையென் றுந்தீபற”
2.திருவடி
இராகம்-உசேனி; தாளம்-ஆதி
பல்லவி
தேடிநின் திருவடியே செல்வமென நாடிவந்தேன்
திருவருள் தந்தாளும் தேவா சற்குருநாதா
அனுபல்லவி
பாடி மகிழும் பாக்கியம் பாரினில் தேட
மூடிய மாய இருள் அருள் குருவே (தேடி)
சரணம்
அடியேனைக் கைவிடுதல் ஆகுமோ இது தகுமோ
அன்பிலா திருப்பது அடிகளுக் கழகாமோ
அரசே நல்லூரில்வாசா ஆரறிவா ரென்றுசொன்ன
அருந்தவனே ஒப்பில்லானே அப்பனே செல்லப்பனே.
(தேடி)
மேலும் “தலையிடத்திற் சேர்வீர் தலைத்தலம் தலையிடத்திற் கைகாட்டிச் சொல்லலுற்றான்” என அவர் பயன்படுத்திய தொடர்களில் திருவடியைத் தலையிடம் என மிகத்தெளிவாகவே கூறியிருப்பதைக் காணலாம். எனவே திருவடி என்ற பதத்திற்கு ஒருமையில் பொருள்கொள்ளுமிடத்து ஆரம்பத்தானம் அல்லது மூலம் அல்லது அடி என்ற பொருளே கொள்ள வேண்டும்.
இரண்டு சிவதொண்டன் நிலையங்களிலும் ஒவ்வொரு நாளும் சிவபுராணம், திருமுறை, நற்சிந்தனைப் பாடல்கள் அத்துடன் சமஸ்கிருத ஸ்லோகங்களும் ஓதப்படும். ஒவ்வொரு மாதங்களிலும் முதல் ஞாயிறு யாழ்ப்பாணத்திலும் மூன்றாம் ஞாயிறு செங்கலடியிலும் யாக நாட்களாக குறிப்பிடப்பட்டு தியானம் அனுசரிப்பதே அன்றைய முக்கியமான நோக்கமாக இருக்கும். அங்கு வரும் அனைத்து அடியார்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு இந்த வழிபாடு நிறைவு பெறும். சிவதொண்டன் நிலையம் இளவயதினர், முதியவர்கள் உட்பட அனைவரையும் அங்கு வந்து தன்னம்பிக்கை, கடமைகள், ஆத்ம ஈடேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகவே நிறுவப்பட்டதாகும்.






